புதுடில்லி : “வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் தலைவர் நிரா ராடியாவுக்கும் அரசியல்வாதிகள், கம்பெனிகளின் அதிபர்கள் மற்றும் மீடியா பிரமுகர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யக் காரணமான புகாரின் நகலை, சீலிட்ட கவரில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிரபல கம்பெனிகளின் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியவரும், வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் தலைவருமான நிரா ராடியாவுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்த பிரச்னை தொடர்பாக, டாடா குரூப் நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாடா மற்றும் நிரா ராடியாவுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் பத்திரிகைகளில் வெளியாகின. இந்த தொலைபேசி உரையாடல்கள் எல்லாம் வருமான வரித்துறையினரால் பதிவு செய்யப்பட்டவை என்றும் தெரிந்தது. இதனால், தனக்கும் நிரா ராடியாவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களை மேலும் வெளியிட தடை விதிக்கக் கோரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு உட்பட சில தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். டாடாவின் மனுவிற்கு பதில் அளித்து கடந்த வாரம், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “ஒன்பது ஆண்டு காலத்திற்குள் 300 கோடி ரூபாய் அளவுக்கு தன் வர்த்தகத்தை நிரா ராடியா விரிவுபடுத்தியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நிரா ராடியா தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அன்னிய உளவு நிறுவனங்களின் உளவாளியாக செயல்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனால் தான் அவரின் தொலைபேசி உரையாடல்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டன’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரத்தன் டாடாவின் மனு நீதிபதிகள் கங்குலி மற்றும் சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: யார் கொடுத்த புகாரின் பேரில், நிரா ராடியாவுக்கும் மற்றும் பலருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டதோ, அந்த புகாரின் நகலை, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். புகாரின் நகலை சீலிட்ட கவரில் வைத்து இந்த கோர்ட்டில் அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்ய வேண்டும். அதேநேரத்தில், இந்த பிரச்னை தொடர்பாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்திற்கு தொழிலதிபர் டாடா பதில் தர விரும்பினால், அதை 2011 ஜனவரி முதல் வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், நிரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை வெளியிட்ட, “ஓபன்’ மற்றும் “அவுட்லுக்’ பத்திரிகைகள் அடுத்த மூன்று வாரங்களுக்குள் தங்களின் பதிலை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நேற்று நடந்த விசாரணையின் போது, “அவுட்லுக்’ மற்றும் “ஓபன்’ பத்திரிகைகள் சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல்கள் அனில் தவான் மற்றும் ராஜிவ் தவான் ஆகியோர் கூறுகையில், “”ரத்தன் டாடாவின் மனு பொதுநலனை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவல்ல. தனிப்பட்ட நலனை பாதுகாப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனு. மேலும், இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், டாடாவின் மனு வை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தேவையில்லை,” என்றனர். அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., தரப்பில் எந்த விதமான பதில் மனுவும் தாக்கல் செய்யப்படாது என, அட்டர்னி ஜெனரல் வாகன்வதி கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: 85 கம்பெனிகள் கதி என்ன? “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கான தகுதி இல்லாத 85 கம்பெனிகளுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ்களை ரத்து செய்ய, தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட காரணமான இந்த 85 கம்பெனிகளின் லைசென்ஸ்களை ரத்து செய்யலாமா என, மத்திய சட்ட அமைச்சகத்திடம் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஆலோசனை கேட்டிருந்தது. அதற்கு இரண்டு வகைகளில் லைசென்ஸ்களை ரத்து செய்யலாம் என, சட்ட அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, “2ஜி’ ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில், ஏல நடவடிக்கைகளில் பங்கேற்க தகுதியில்லாமல் இருந்த கம்பெனிகளின் லைசென்ஸ்களை ரத்து செய்யலாம். இல்லையெனில், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற அந்த நேரத்தில், போதுமான மூலதனத்தை கொண்டிராமல் இருந்த கம்பெனிகளின் லைசென்ஸ்களை ரத்து செய்யலாம் என தெரிவித்துள்ளது. அட்டர்னி ஜெனரல் வாகன்வதியிடம் கருத்து கேட்ட பின்னரே சட்ட அமைச்சகம் இதைக் கூறியுள்ளது. இதையடுத்து, 85 கம்பெனிகளுக்கும், “உங்களின் லைசென்சை ஏன் ரத்து செய்யக்கூடாது?’ என, கேட்டு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கைகளில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. நோட்டீசிற்கான விளக்கத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பெற்ற பின், அவற்றுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.
Leave a Reply