டெல்லி: அரசு அதிகாரிகளுடன் நடந்த சமரச பேச்சு தோல்வி அடைந்ததால், இன்று இரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நாடுமுழுவதும் தொடங்குகிறது.
இதனால் பெரும் பாதிப்பும், விலை உயர்வும் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை தனியார் வசம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இந்த நெடுஞ்சாலைகளில் தனியார்கள் ஆங்காங்கே டோல்கேட் அமைத்து சுங்கவரி வசூலித்து வருகிறார்கள்.
தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மற்ற நெடுஞ்சாலைகளில் சுங்க வரியைக் குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 5-ந் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். இதையொட்டி கடந்த 1-ந்தேதி முதல் லாரி சரக்கு புக்கிங் அனைத்தும் நிறுத்தப்பட்டன. வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
மாநிலங்களுக்கிடையே ஓடும் லாரிகள் நிறுத்தப் பட்டதால் காய்கறி உள்பட அத்தியாவசியப் பொருட்கள் முக்கிய நகரங்களில் தேங்கியுள்ளன. பார்சல்களும் முடங்கி விட்டன.
இதையடுத்து லாரி உரிமையாளர்களை மத்திய அரசு அழைத்து பேச்சு நடத்தியது. மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சர் கமல்நாத்துடன் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி மற்றும் சங்க நிர்வாகிகள் பேச்சு நடத்தினார்கள்.
அப்போது மத்திய தரை வழி போக்குவரத்து துறை அதிகாரிகள் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருந்தனர். இதனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
திட்டமிட்டபடி ஸ்ட்ரைக்!
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டப்படி லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். எனவே இன்றிரவு முதலே லாரி போக்குவரத்து முடங்கும் என்று தெரிகிறது.
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் சுகுமார் இதுகுறித்து கூறுகையில், “எங்கள் முக்கிய கோரிக்கையான சுங்க வரியை சீராக்குவது குறித்து மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. தனியாரிடம் சுங்க வரியை வசூலிக்க காண்டிராக்ட் கொடுத்துள்ளதால் அதில் இனி சலுகை அறிவிக்க முடியாது என்றனர். நாங்கள் அதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுள்ளோம்,” என்றார்.
இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் 74 லட்சம் லாரிகள் பங்கேற்கின்றன.
தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரம் லாரிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 96 ஆயிரம் சரக்கு வாகனங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதில் 40 ஆயிரம் லாரிகள் தினமும் வட மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்பவை.
சில லாரிகள் ஆங்காங்கே உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் தமிழகத்தில் இருந்து தீப்பெட்டி, ஜவுளி, தேங்காய், உள்ளிட்ட பொருட்கள் வட மாநிலங்களுக்கு செல்வது தடைப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் நடை பெறும் இந்த போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பெட்ரோல், டீசல் ஏற்றிவரும் டேங்கர் லாரிகளின் உரிமை யாளர்கள் சங்கம், துறைமுக தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், டேக்சி ஓட்டுனர்கள் சங்கம், அனைத்து மோட்டார் சங்கம், லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கம், தனியார் பஸ் உரிமை யாளர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.
தமிழ்நாடு கோழிப்பண் ணையாளர்களும் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக 6,7-ந் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் 2 நாட்களில் 5 கோடி மூட்டை தேங்கும்.
காய்கறி உள்பட அத்தியா வசிய பொருட்கள் வருகை பாதிக்கும் என்பதால் அவற்றின் விலையும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு சேலம் மாவட்ட பஸ் உரிமையாளர் கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனியார் பஸ்களும்…
இந்தப் போராட்டத்தில் தனியார் பஸ்களும் பங்கேற்கின்றன. லாரிகளைப் போலவே, இந்த சுங்கக் கட்டணத் தொல்லையில் தாங்களும் பாதிக்கப்படுவதால் போராட்டத்தில் குதித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் தனியார் பஸ்கள் சுமார் 5 ஆயிரம் ஓடாது. 5-ந்தேதி நள்ளிரவு 12மணி முதல் 6-ந்தேதி நள்ளிரவு 12மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளனர் தனியார் பஸ் முதலாளிகள்.
கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தனியார் பஸ்கள் ஒட்டு மொத்தமாக முதன் முதலாக இப்போதுதான் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
Leave a Reply