பெய்ஜிங்: போக்குவரத்து நெரிசல் என்பது எல்லா நாடுகளுக்குமே பெரிய தலைவலியாக மாறிவிட்டது. இதனைச் சமாளிக்க கார் லைசென்ஸை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளது சீனா.
பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரிய நாடான சீனாவில் தற்போது கார் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான நகரங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
குறிப்பாக சீன தலைநகரம் பெய்ஜிங் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது. எனவே கார் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக கார் வைத்திருப்பவர்களின் லைசென்சை மூன்றில் ஒரு பங்காக குறைத்து விட்டது. பெய்ஜிங் நகரில் மட்டும் இந்த ஆண்டு மட்டும் 7 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் அடுத்த ஆண்டு (2011) 2 லட்சத்து 40 ஆயிரம் லைசென்ஸ்களை மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது.
இதற்கான உத்தரவை பெய்ஜிங் நகரசபை சமீபத்தில் பிறப்பித்தது. அதே போல இனி கார்களை வாங்குவதும் சீனாவில் அத்தனை சுலபமாக இருக்காது. எனவே லாட்டரி போன்று குலுக்கல் முறையில் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த முறை வருகிற 26-ந்தேதிக்குப் பிறகு அமலுக்கு வருகிறது.
குலுக்கல் மூலம் கார் விற்பனை செய்யும் முறை வருகிற 26-ந்தேதி அன்று நடைபெற உள்ளது. எனவே கார் வாங்குபவர்கள் பெருமளவில் கார் விற்பனை மையங்களில் குவிகின்றனர். குலுக்கலில் தங்களின் பெயர் இடம் பெற முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் வருகிற பிப்ரவரி மாதம் பெய்ஜிங் நகரில் 50 லட்சம் கார்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓரளவு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என சீன அரசு எதிர்பார்க்கிறது.
Leave a Reply