மகிந்திரா சத்யம் – டெக் மகிந்திரா இணைப்புக்கு கடும் எதிர்ப்பு!

ஹைதராபாத்: மகிந்திரா சத்யம் நிறுவனத்தை டெக் மகிந்திராவுடன் இணைக்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் சத்யம் பங்குதாரர்கள்.

இந்த இணைப்பு முடிவில் உள்நோக்கம் இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் பங்குதாரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரூ 14000 கோடி முறைகேடு நடந்து, பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த ராமலிங்க ராஜுவின் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கியது மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம். நிறுவனத்தின் பெயரையும் மகிந்திரா சத்யம் என மாற்றியது.

இப்போது மகிந்திரா குழுமத்தின் ஐடி நிறுவனமான டெக் மகிந்திராவுடன் மகிந்திரா சத்யம் நிறுவனத்தை இணைக்கப் போவதாக மகிந்திரா நிறுவனம் அறிவித்தது.

இந்த முடிவை சத்யம் பங்குதாரர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

நேற்று நடந்த மகிந்திரா சத்யம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பங்குதாரரர்கள், “மகிந்திரா சத்யமை, டெக் மகிந்திராவுடன் இணைக்க இத்தனை அவசரம் காட்டுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

“டெக் மகிந்திரா ஐடி துறையில் மிகச் சிறிய அளவில்தான் பிரபலமாகியுள்ளது. ஆனால் சத்யம் நிறுவனம் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டது. பெரிய நிறுவனம். எனவே இந்த நிறுவனத்தைக் கொண்டுபோய் டெக் மகிந்திராவுடன் இணைப்பதை ஏற்க முடியாது”, என்றனர் பங்குதாரர்கள்.

மேலும் இந்த இணைப்புக்கான அவசியம் என்ன, இந்த இணைப்பின் நோக்கம் என்ன போன்றவற்றை ஏன் மகிந்திரா குழுமம் விளக்க மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர்.

முறைகேடுகளால் பாதிக்கப்பட்டு, இப்போது மெல்ல மெல்ல நிமிரத் துவங்கியுள்ள சத்யம் முதலில் சுதந்திரமாக இயங்கி பழைய திறனுக்கு வரட்டும். அதன் பிறகு இணைப்பு குறித்துப் பேசலாம் என கூட்டத்தில் பங்கு கொண்ட பெரும்பாலான பங்குதாரர்கள் தெரிவித்ததால், இப்போதைக்கு இணைப்பு முயற்சியை மகிந்திரா கைவிடும் என்றே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *