சென்னை : “மனைவி உயிருடன் இருக்கும் போது, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கான்ஸ்டபிளை பணி நீக்கம் செய்தது செல்லும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கான்ஸ்டபிளாக ராமகிருஷ்ணன் என்பவர் பணியாற்றினார். மனைவி உயிருடன் இருக்கும் போது, காயத்ரிதேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், இது போலீஸ் நடத்தை விதிகளுக்கு முரணானது என்றும், ராமகிருஷ்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டது. வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போது, முத்து என்கிற பெண்ணை திருமணம் செய்து மூன்று குழந்தைகளை பெற்றுள்ளார். பின், கள்ளிகுளத்தைச் சேர்ந்த காயத்திரிதேவி என்பவரை நாகர்கோவில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். “மெமோ’ கொடுத்த பின், சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று முதல் திருமணத்தை ரத்து செய்துள்ளார். இவரது விளக்கத்தில் திருப்தியடையாத அதிகாரிகள், ராமகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க வள்ளியூர் டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டனர். ராமகிருஷ்ணன் மீது முதல் மனைவியும் போலீசில் புகார் கொடுத்தார்.
விசாரணையில் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவே, ராமகிருஷ்ணனை பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட போலீஸ் எஸ்.பி., இந்த உத்தரவை பிறப்பித்தார். 1999ம் ஆண்டு நவம்பரில் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் ராமகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். பணி நீக்க உத்தரவுக்கு தீர்ப்பாயம் தடை விதித்தது. தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட பின், இந்த வழக்கு ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஆர்.முரளி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: கான்ஸ்டபிளின் முதல் மனைவி அளித்த சாட்சியமே, அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்கிறது. கணவரிடம் முதல் மனைவி முறையிட்டும், அவர் திருந்தவில்லை. மாறாக, முதல் மனைவியை கீழே தள்ளியுள்ளார். அதன் மூலம் தலையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். காயத்ரிதேவியை விட்டு விலகுமாறு முதல் மனைவி கேட்டுக் கொண்ட பிறகும், இரண்டு பேரையும் வைத்து பராமரிக்க தனக்கு தகுதியிருக்கிறது என ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதற்கு உடன்படாத முதல் மனைவி, போலீசில் புகார் கொடுத்துள்ளார். முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, வேறொரு பெண்ணுடன் போலீஸ் ஒருவர் வாழ்ந்தாலே, நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க முடியும். தண்டனை அளிப்பதற்கு இந்த ஒழுங்கீனமே போதுமானது. ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், பெரிய அளவில் தண்டனை விதிக்க வேண்டும் என அரசே சிபாரிசு செய்துள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, போலீஸ் கான்ஸ்டபிளின் நடத்தையால் போலீஸ் துறைக்கே அவமரியாதை ஏற்படும். அதுவும், சீருடைப் பணியாளர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுவர். எனவே, கான்ஸ்டபிளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் குறுக்கிட முகாந்திரமில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply