மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு அரசு ரூ.5,000 நிதி உதவி

posted in: அரசியல் | 0

சென்னை : மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்கவும், இழப்பீடுகள் வழங்கவும், 500 கோடி ரூபாய் ஒதுக்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


முழுமையாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு, 5,000 ரூபாய் வீதமும், பகுதியாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு, 2,500 ரூபாய் வீதமும், வெள்ளத்தால் சூழப்பட்ட குடிசைகள் அல்லாத மூன்று லட்சத்து 20 ஆயிரம் வீடுகளுக்கு, தலா 1,500 ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வது குறித்த தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம், புதிய தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், ஒன்பது மாவட்டங்களில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு திரும்பிய எட்டு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் அறிக்கைகள் மீது விவாதிக்கப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவுகள்:வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் குடிசை அல்லாத வீடுகள் மற்றும் பயிர் சேதம் ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்கவும், சாலைகள், ஏரிகள், குளங்களை தற்காலிகமாக சீரமைக்கவும், உத்தேசமாக தேவைப்படும், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.பயிர் இழப்புக்கு, சாலைகள், குளங்கள் ஏரிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்கவும் தேவையான, 1,607 கோடி ரூபாயை, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசிடம் கேட்டுப் பெறப்படும்.மழை, வெள்ளத்தால் இதுவரை 203 பேர் இறந்துள்ளனர். இவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா இரண்டு லட்சம் ரூபாயை, மாவட்ட கலெக்டர்கள் வழங்கி வருகின்றனர். அதேபோல, மழை வெள்ளத்தால் இதுவரை 5,068 கால்நடைகள் இறந்துள்ளன.

கறவை மாடு, உழவு மாடு போன்றவற்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதமும், கன்றுக்குட்டிகளுக்கு 5,000 ரூபாய் வீதமும், ஆடுகளுக்கு ஆயிரம் ரூபாய், கோழிகளுக்கு 30 ரூபாய் வீதமும் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்.இதுவரை, 8,000 குடிசைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரம் குடிசைகள் பகுதியாக பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களில் மழைநீர் வடியாமல் உள்ள நிலையில், குடிசைகளின் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும், இவை பற்றி ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட்டு, முழுமையாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு, 5,000 ரூபாய் வீதமும், பகுதியாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு, 2,500 ரூபாய் வீதமும், நிவாரணமாக ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும்.

மேலும், மூன்று லட்சத்து 20 ஆயிரம் குடிசைகள் அல்லாத பிற வீடுகளும் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான நிவாரணமாக வீடு ஒவ்வொன்றுக்கும் தலா 1,500 ரூபாய் வீதம் உடனடியாக வழங்கப்படும்.மீனவர்கள் படகு, கட்டுமரம், வலை ஆகியவை மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டிருந்தால் புதிதாக வாங்க, 7,500 ரூபாய் வீதமும், ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை பழுது பார்க்க, 2,500 ரூபாய் வீதமும் நிவாரணம் வழங்கப்படும்.மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சிறப்பு ஆணையர்கள் அறிக்கைப்படி, 15 லட்சம் ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடிந்ததும், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் முழுமையாக கணக்கிடப்பட்டு, 50 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு எக்டேருக்கு 8,000 ரூபாய் வீதமும், நெல் தவிர மற்ற பயிர்களுக்கு, அனுமதிக்கப்பட்ட அளவிலும் நிவாரணம் வழங்கப்படும்.நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், வெள்ள பாதிப்பை மதிப்பீடு செய்யவும் ஒன்பது மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆணையர்களே, தொடர்ந்து வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து கண்காணிப்பர்.

கடலூரில் வெள்ளாறு, பரவனாறு, உப்பாறு ஆகிய ஆற்றுப்படுகைகளில் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கான திட்டமும், காவிரி டெல்டா பகுதிகளில் கொள்ளிடம், அரிச்சந்திரா நதி, வெண்ணாறு, பாமிணியாறு, கோரையாறு, வளவனாறு, வெட்டாறு போன்ற டெல்டா பகுதிகளில் உள்ள ஆற்றுப் படுகைகளில் வடிகால் வசதியை ஏற்படுத்தவும், நீண்டகால வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் திட்டங்களை வருங்காலத்தில் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவும், அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *