புதுடில்லி : முதுபெரும் காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி தான் தன் தந்தை எனக் கூறி இளைஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், “டி.என்.ஏ., பரிசோதனைக்கு திவாரி ஆட்பட வேண்டும்’ என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி; ஆந்திர மாநில கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு எதிராக 31 வயதான ரோகித் ஷேகர் என்பவர், டில்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “என்.டி.திவாரி தான் தன் தந்தை என, அறிவிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திவாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ரோகித் பிறந்து 31 ஆண்டுகளுக்குப் பின் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தனக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், தன்னை டி.என்.ஏ., சோதனைக்கு ஆட்படும்படி கட்டாயப்படுத்த முடியாது’ என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்து கடந்த செப்., 21ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி ரவீந்திரபட் தன் உத்தரவில் கூறியதாவது: வழக்கு தொடர்ந்த ரோகித்தின் தந்தை தான் என்.டி.திவாரியா என்பதை உறுதி செய்ய, டி.என்.ஏ., பரிசோதனைக்கு திவாரி ஆட்பட வேண்டும். அறிவியல் ரீதியான சோதனைகளை மேற்கொள்ள திவாரி தன் ரத்தத்தை கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. தனது தந்தை யார் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மகனுக்கு உள்ளதால், டி.என்.ஏ., பரிசோதனைக்கு தன்னை கட்டாயப்படுத்தக்கூடாது என்ற திவாரியின் கோரிக்கையை ஏற்க முடியாது. இது போன்ற வழக்குகளில் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே செயல்பட முடியும்.
டி.என்.ஏ., பரிசோதனைக்கு திவாரி ஆட்பட வேண்டும் என உத்தரவிட்டதன் மூலம், எந்த உரிமைகளும் மீறப்படவில்லை. ரோகித்தின் வளர்ப்பு தந்தை சர்மா, தானாகவே முன்வந்து டி.என்.ஏ., சோதனை செய்து கொண்டார். அதில், ரோகித் அவரது மகன் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. எனவே, திவாரியும், ரோகித்தும், அவரின் தாயார் உஜ்வாலாவும், கோர்ட்டின் இணை பதிவாளர் முன் ஆஜராகி, மருத்துவப் பரிசோதனை தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். டில்லி ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ரோகித்தும், அவரின் தாயார் உஜ்வாலாவும் வரவேற்றுள்ளனர். தங்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறியுள்ளனர். “”தன் தந்தை யார் என்பதை அறிந்து கொள்ள என் மகன் ஆவலாக உள்ளார்; இந்த தீர்ப்பு என் மகனுக்கு பதில் அளித்துள்ளது,” என உஜ்வாலா கூறினார்.
Leave a Reply