தங்களின் ஐ.டி. துறையை மூடுவதற்கு அனுமதி கேட்டு, பல கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
குறைந்தது 10 வருடங்களுக்கு முன்பாக, இந்திய கல்வி உலகில், எங்கும்-எப்போதும், நீக்கமற நிறைந்திருந்த ஒரு வார்த்தை எது என்றால், அது ஐ.டி. என்பதுதான். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்ப படிப்புகளுக்கு பொறுப்பு வகிக்கும், ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஏராளமான கல்வி நிறுவனங்கள் தங்களிடமுள்ள ஐ.டி. படிப்புகளை ரத்து செய்துவிட அனுமதிகேட்டு அந்த கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளன.
ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் எஸ்.எஸ். மந்தா இதுகுறித்து கூறுகையில், “1000 க்கும் மேற்பட்ட கல்லூரிகளிடமிருந்து, ஐ.டி. துறையை ரத்துசெய்யவோ அல்லது அத்துறைக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை மெக்கானிக்கல் அல்லது சிவில் போன்ற துறைகளுக்கு மாற்றவோ அனுமதிகேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஆனால் அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, அந்தந்த கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து இதுதொடர்பான தடையில்லா சான்றிதழைப் பெற்று, அதனுடன் சேர்த்தே வேண்டுகோள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று அந்த நிறுவனங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்று பெரிய அளவில் ஐ.டி. துறையை மூடுவதானது, மற்ற துறைகளின் வளர்ச்சியில் சமமின்மையை ஏற்படுத்திவிடும். அதைத்தவிர, ஐ.டி. துறையில் தற்போது ஆசிரியர் பணியில் இருப்பவர்களின் எதிர்காலம் மற்றும் அத்துறை சம்பந்தமாக செய்யப்பட்டுள்ள முதலீடுகள் போன்ற அம்சங்களில் எழப்போகும் பெரிய சிக்கல்கள் குறித்தும் தீவிரமாக யோசிக்க வேண்டியுள்ளது.
எனினும், இதுவரை 6 கல்லூரிகள் மட்டுமே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து தடையில்லா சான்றுகளை பெற்றுள்ளன” என்று கூறினார்.
Leave a Reply