ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு மருந்து கிடங்கு அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகம்தான் இந்தியாவிலேயே அதிகளவான 15 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. இதன்மூலம் மருத்துவ துறையில் நர்சிங் மற்றும் பாராமெடிக்கல்(மருத்துவ உதவியாளர்கள் தொடர்பான) உள்ளிட்ட பல நிலைகளில் மனித வளத்தை பெருக்க முடிகிறது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலர் வி.கே. சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ” ஒரு மாவட்டத்திற்கு தலா ஒரு மருத்துவ கல்லூரி என்ற தமிழக அரசின் திட்டமானது, தமிழக மருத்துவத் துறை வரலாற்றில் ஒரு மைல்கல். மேலும் கிராமப்புறங்களில், பல்மருத்துவம், பி.எஸ்சி. நர்சிங் மற்றும் நர்சிங் படிப்புகளில் டிப்ளமோ போன்ற பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு தனியார் அறக்கட்டளைகள் அரசால் ஊக்குவிக்கப்படும்.
பி.எஸ்சி. நர்சிங் படிப்புகளை நடத்த 10 நர்சிங் பள்ளிகள், 10 நர்சிங் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்த அரசு மருத்துவமனைகள் சர்வதேச நிலையில் தரம் உயர்த்தப்படும்.
இதைத்தவிர, அனைத்து அரசு மருத்துவமனைகளும், மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால்(என்.ஏ.பி.எச்) அங்கீகரிக்கப்படும். தற்போது மாநிலத்தில் 2 அரசு மருத்துவமனைகள் இந்த வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் அந்த வாரியத்தால் அங்கீகரிக்கப்பட உள்ளது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தையும், சேவைகளையும் மேம்படுத்த பொது – தனியார் ஒருங்கிணைப்பை அரசு ஊக்குவிக்கிறது. தமிழகத்திலுள்ள பல மருத்துவமனைகளில் கடந்த 4 வருடங்களில் மாநிலம் முழுவதும் பல நிலைகளிலுள்ள ஆயிரக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply