மீண்டும் எழ முடியாத அளவு தி.மு.க.,விற்கு அடி :ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

சென்னை : “”அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நடைபெறும் யுத்தம், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம். இந்த முறை நம்முடைய தாக்குதல் வலுவாக இருக்க வேண்டும்.


எதிரி மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவிற்கு நம்முடைய அடி மரண அடியாக இருக்க வேண்டும்,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆவேசத்துடன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 23ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று காலை மலர் அஞ்சலி செலுத்தினார். இதில், ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில், ஜெயலலிதா பேசியதாவது:மறைந்த பின்னரும் மறக்க முடியாத மாமனிதராய், தமிழக மக்கள் நினைவில் நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரின் நினைவு நாளன்று ஒவ்வொரு ஆண்டும் நாம் இங்கு கூடி வருகிறோம். இந்த முறை விரைவில் தமிழக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில் நாம் இங்கே குழுமியிருக்கிறோம்.கருணாநிதியை அரசியலிலிருந்து ஒழித்துக் கட்ட அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., நிறுவினார். எம்.ஜி.ஆரால், சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதை கேலியும், கிண்டலும் செய்தார் கருணாநிதி. அத்திட்டத்தை கருணாநிதியால் இன்று வரை தவிர்க்க முடியவில்லை.அதேபோல, நான் கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டத்தையும், இலவச பாடநூல் திட்டத்தையும் கருணாநிதியால் இன்று வரை தவிர்க்க முடியவில்லை.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல இலவச திட்டங்களை அறிவித்து மைனாரிட்டி அரசை அமைத்தார் கருணாநிதி. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என நான் அறிவித்தேன். கருணாநிதி, “எங்கும் ஊழல், எதிலும் ஊழல்’ என அதை மாற்றிவிட்டார். இந்த ஆட்சி ஆறரை கோடி தமிழக மக்களுக்காக நடக்கும் ஆட்சியா? அல்லது பரந்து விரிந்த கருணாநிதியின் குடும்பத்திற்காக நடக்கும் ஆட்சியா? என மக்கள் கேட்கும் அளவு ஒரு அலங்கோல ஊழல் ஆட்சி தற்போது தமிழகத்தில் நடக்கிறது. ஆறரைக் கோடி மக்களை வேதனையில் தள்ளி, ஒரு குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, மணல், கிரானைட் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரிச் சீட்டு விற்பனை, நில அபகரிப்பு, திரைப்படத் துறையை கபளீகரம் செய்தது, சட்டம் ஒழுங்கு சீரழிவு, கொலை, கொள்ளையர்களுக்கு துணை போவது என சகலவித மக்கள் விரோத நடவடிக்கைகள் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தமிழக மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.பத்திரிகைகள், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் “2 ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஈடுபாடு குறித்து வெளிச்சம்போட்டு காட்டியுள்ளன.

இதன்மூலம், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் தலைகுனிவை ராஜா மூலம் ஏற்படுத்தியுள்ளார் கருணாநிதி.அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நடக்கும் யுத்தம், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம். எம்.ஜி.ஆர்., தீயதியை மூன்று முறை வீழ்த்தி ஆட்சி அமைத்தார். நான் இரண்டு முறை அதே தீயதியை வீழ்த்தி ஆட்சியமைத்தேன்.தீயதியை நிரந்தரமாக அரசியலில் இருந்து, இதுவரை அகற்ற முடியவில்லை. எதிரிகளை தாக்குவதில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. லேசாக தாக்கினால் தள்ளாடுவர். சற்று பலமாக தாக்கினால், கீழே விழுந்து விடுவர்; ஆனால், மீண்டும் எழுந்து விடுவர்.

இந்த முறை நமது தாக்குதல் வலுவாக இருக்க வேண்டும். எதிரி மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவிற்கு நமது அடி மரண அடியாக இருக்க வேண்டும்.வரும் 2011ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைக்கப் போவது உறுதி. அந்த அளவிற்கு தி.மு.க., மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினர் துணிவோடு பணியாற்ற வேண்டும். நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. உங்களுக்கு வழிகாட்டியாக உங்களுக்கு முன்னால் நான் செல்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பொன்னையன் உறுதிமொழிவாசகங்களை வாசிக்க, திரண்டிருந்த கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *