மேலூர்:மதுரை மாவட்டம் மேலூர் அருகே முக்கம்பட்டியில் 105 கோடி ரூபாய் மதிப்பிலான “டெர்மினல் மார்க்கெட்’ (வேளாண் விற்பனை முனையம்) துவக்கப்பட உள்ளது.
மேலூர் தாலுகா திருவாதவூர் அருகே 50 ஏக்கரில் அமைய உள்ள இந்த மார்க்கெட்டிற்கான இடத்தை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் இடம் பற்றி விளக்கினார்.
வேளாண் விற்பனை வாரிய தலைவர் கணேசன், வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி, விவசாய கல்லூரி முதல்வர் வைரவன், மாவட்ட இணைஇயக்குனர் சங்கரலிங்கம், துணைஇயக்குனர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் மூன்று இடங்களில் விற்பனை முனையம் அமைக்கப்படுவது குறித்து அரசு அறிவித்து இருந்தது. இவற்றிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
பெருந்துறையில் 111.50 கோடி ரூபாய், மதுரை முக்கம்பட்டியில் 105.05 கோடி ரூபாய், சென்னையில் 113.85 கோடி ரூபாய் மதிப்பிலும் மார்க்கெட்கள் அமைய உள்ளன. இப்பணி இரண்டு ஆண்டுகளில் முடிவடையும்.தென்பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் இருந்து இம்மார்க்கெட்டிற்கு காய்கறிகளை கொள்முதல் செய்து வர, 20 மையங்களில் கட்டடம் கட்டப்படும். இம்மார்க்கெட் உலகத்தரத்தில் செயல்படும்.
இங்கு காய்கறிகள், பழங்களை பாதுகாக்க குளிர்பதன வசதி, பதப்படுத்தும் நிலையம், தரம்பிரிக்கும் வசதி, ஏலமிடும் இடம், ஆய்வுக் கூடம், வாகன நிறுத்தங்கள், எடை நிலையம் என நவீன வசதிகள் இருக்கும்.அதேபோல மதுரை அவனியாபுரத்தில் 11.4 ஏக்கரில், வேளாண் விற்பனை நிலையம் 85 கோடி ரூபாய் மதிப்பில் அமைய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சியும் வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு மத்திய அரசு முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, டெண்டர் விடப்பட உள்ளது. இங்கும் அனைத்து நவீன வசதிகளும் அமைய உள்ளன, என்றார்.
Leave a Reply