சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை ராசாவின் டெல்லி மற்றும் சென்னை வீடுகளில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இதனால் திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
அதே போல தொலைத் தொடர்புத்துறையின் நான்கு முன்னாள் மூத்த அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்ட் நடக்கிறது.
ராசாவின் டெல்லி வீட்டிலும், சென்னை வீட்டிலும், பெரம்பலூர் வீட்டிலும், நீலகிரி வீட்டிலும் மற்றும் சென்னை ஆர்.ஏ.புரம், ஆல்வார்பேட், நந்தனம், கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் உள்ள ராஜாவின் உறவினர்கள், நண்பர்கள், அவரது பினாமியாக இருக்கலாம என்று சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடக்கிறது.
அதே போல ராசாவின் தனிச் செயலராக இருந்த மூத்த அதிகாரி சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பெகுரியா, தொலைத் தொடர்புத்துறையின் உறுப்பினரான ஸ்ரீதரா, துணை இயக்குநர் ஆர்.கே.ஸ்ரீவத்சவா ஆகியோரின் டெல்லி வீடுகளில் இந்தச் சோதனைகள் நடக்கின்றன.
டெல்லி, சென்னையில் மொத்தம் 10 இடங்களில் இன்று காலை 7 மணிக்கு இந்தச் சோதனைகள் ஒரே நேரத்தில் தொடங்கின.
ராஜாவிடம விசாரணை?:
இந்த சோதனையின்போது ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையும் நடத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ராஜாவை இதுவரை ஒரு கேள்வி கூட கேட்காமல் இருப்பது ஏன் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் சிபிஐயை கடுமையாக சாடியிருந்தது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில் தற்போது ராஜா வீடுளை சிபிஐ ரெய்டு செய்து வருகிறது.
2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொலைத் தொடர்புத் துறை செயலாளராக பதவியேற்றவர் பஹுரா. அவரது வீட்டை சோதனையிட்டு வரும் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் சரமாரியாக கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே ராஜாவின் முதன்மைச் செயலாளராக இருந்து வந்த சந்தோலியாவை அமலாக்கப் பிரவு அதிகாரிகள் துருவித் துருவி சமீபத்தில் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது அவர் சிபிஐ விசாரணைக்குட்பட்டுள்ளார்.
Read: In English
சோதனைக்குள்ளாகியுள்ள ஸ்ரீவத்சவா, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கும் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். இதனால் அவரும் விசாரணைக்குள்ளாகியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி 2ஜி ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ பதிவு செய்தது. அதன் பின்னர் இப்போதுதான் அது ராஜாவை நெருங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply