ராஜா விவகாரத்தால் திமுகவில் சலசலப்பு-கடும் அதிருப்தியில் மு.க.ஸ்டாலின்?

posted in: அரசியல் | 0

சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகள் திமுகவுக்கு நல்லதல்ல.

குறிப்பாக சட்டசபைத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக மேலிடம் இருப்பதால் மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படும் என கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜா விவகாரம் தொடர்பாக கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதை கட்சி மேலிடத் தலைவர்களிடம் அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் ராஜாவை கைவிடப் போவதில்லை என்று முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம், ராஜா குற்றவாளி என்று நிரூபணமானால் அவர் மீது நிச்சயம் நடவடிக்கை பாயும் என்றும் அவர் கூறி வைத்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவின் பெயர் அடிபடத் தொடங்கியது முதல், நேற்று நடந்த சிபிஐ ரெய்டுகள் வரை, ராஜாவுக்கு முதல்வர் கருணாநிதி முழு ஆதரவாக இருந்து வருகிறார். அதேபோலத்தான் திமுகவும் அவருக்கு முழு ஆதரவுடன் இருந்து வருவதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ராஜா விவகாரம் தொடர்பாக திமுகவுக்குள், குறிப்பாக உயர் மட்டத் தலைவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜா விவகாரத்தில் கட்சியின் பெயர் மேலும் மேலும் கெடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ராஜா மீது ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுத்தாக வேண்டும். குறைந்தபட்சம் அவரை விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்து வைக்கலாம். இதைக் கூட நாம் செய்யாவிட்டால் பொதுமக்கள் மத்தியில் கட்சியின் பெயர் மேலும் கெடும் வாய்ப்பு உள்ளது. சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில் ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை முழுமையாக ஆதரித்தோமானால் அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று சில மூத்த தலைவர்கள் கூறியுள்ளனராம்.

தற்போது ராஜா விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு இரு தரப்பிலிருந்து இரு விதமான நெருக்கடிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு தரப்பு, ராஜாவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறதாம். இதில் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களே உள்ளனராம். மேலும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூட இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. தனது அதிருப்தியை அவர் கட்சியின் மூத்த தலைவர்களிடம் பகிரங்கமாகவே கூறி விட்டதாகவும் தெரிகிறது.

அதேசமயம், ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது அவர் தவறு செய்து விட்டதாக நாமே ஒத்துக் கொண்டது போலாகி விடும். அதுவும் கட்சிக்குக் கெட்ட பெயரையே ஏற்படுத்தும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இன்னொரு தரப்பு கருத்து தெரிவித்துள்ளதாம். இதிலும் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் கருத்து தெரிவிக்கையில், கட்சித் தலைவர்கள் மத்தியில் ராஜா விவகாரம் குறித்து பெரும் கவலை பரவியுள்ளது. இது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் அஞ்சுகின்றனர். ராஜா மீது ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தலைவரிடம் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் துணை முதல்வரும் கூட ராஜா விவகாரத்தில் நடந்து வருவது குறித்து அதிருப்தி அடைந்துள்ளார். தனது அதிருப்தியை தலைவரிடமே அவர் வெளிப்படையாக கூறியுள்ளார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *