ராடியா டேப் கசிவு இனி இருக்காது சுப்ரீம் கோர்ட்டில் அரசு தகவல்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “நிரா ராடியாவுடன், தொழிலதிபர் ரத்தன் டாடா பேசிய தொலைபேசி உரையாடல்கள், விசாரணை நோக்கத்துக்காகவே பதிவு செய்யப்பட்டன.

இவை இனிமேல் கசியாது. இந்த பதிவுகள், மீடியாக்களுக்கு கசிந்தது குறித்து, விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’ என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொடர்பு துறை நிறுவனத்தை நடத்தி வரும் நிரா ராடியா என்பவர், இது தொடர்பாக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களிடம் தொலைபேசியில் பேசிய பதிவுகள், சமீபத்தில் மீடியாக்களில் வெளியிடப்பட்டன. ரத்தன் டாடாவுடன் பேசிய பதிவுகளும் வெளியாயின.இதனால், கடும் அதிருப்தி அடைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, தொலைபேசி உரையாடல்களை மீடியாவுக்கு கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தனிநபர் உரிமையின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:நிரா ராடியாவுடன், தொழிலதிபர் ரத்தன் டாடா பேசிய தொலைபேசி உரையாடல்கள், விசாரணை நோக்கத்துக்காகவே பதிவு செய்யப்பட்டன. இந்த பதிவுகள், மீடியாக்களுக்கு கசிந்தது குறித்து, விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இந்த பதிவுகள், மீடியாக்களில் வெளியானது தொடர்பான விவகாரம், மீடியாக்களுக்கும், மனுதாரருக்கும் இடையிலான பிரச்னை. அதே சமயம் இதில் உள்ள தகவல்கள் இனி கசியாமல் இருக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், உள்துறை அனுமதியின் பேரில் வரித்துறை இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவில், நிரா ராடியா தொலைபேசியின் 14 இணைப்புகளும் தொடர்ந்து 120 நாட்களுக்கு கண்காணிக்கப்பட்டன. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *