கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. அரசில்ரெட்டி சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஜனார்த்தன ரெட்டி, வெங்கட்ரெட்டி இருவரும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
ரெட்டி சகோதரர்கள் பெல்லாரி மாவட்டத்தில் எராளமான சுரங்கத்தொழில்களை நடத்தி வருகிறார்கள். இவர்கள் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.
ரெட்டி சகோதரர்களின் சுரங்கங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வருமானவரி அதிகாரிகளும் சோதனை நடத்தினார்கள். அப்போது ரெட்டி சகோதரர்களுக்கு சொந்தமான ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்தது.
ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்துக்கு சிங்கப்பூர், துபாய், மற்றும் பிரிட்டிஸ் விர்ஜின் தீவுகளில் அலுவலகம் உள்ளது. இதன் மூலம்
வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்தது. விற்பனை வரித்துறையினர் இதை கண்டுபிடித்தனர்.
2007-2008ம் ஆண்டில் மட்டும் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் 81 கோடியே 42 லட்சத்து 88 ஆயிரத்து 802 ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட அதிரடிக்கு தயாராகி வருகிறார்கள்.
ரெட்டி சகோதரர்களின் வரி ஏய்ப்பு விவகாரம் கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஏற்கனவே நிலமோசடி குற்றச்சாட்டுக்களால் எதிர்க்கட்சிகளிடம் சிக்கி எடியூரப்பா படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ரெட்டி சகோதரர்கள் வரி ஏய்ப்பை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தால் எடியூரப்பா மேலும் நெருக்கடிக்குள்ளாக நேரிடும்.
Leave a Reply