நாமக்கல்: சுங்கவரி பிரச்சினைக்கு தீர்வு காண வருகிற 5ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இப்போதே ஸ்ட்ரைக் துவங்கிவிட்டது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் லாரி அதிபர்களுடன் மத்திய அரசு அதிகாரி இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதில் உடன்பாடு ஏற்பட்டால் லாரி ஸ்டிரைக் வாபஸ் ஆகும் என்று தெரிகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஒரே மாதிரியான சுங்கவரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தடுக்கும் வகையில் மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் 2 முறை லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது எந்தவித சுமூக தீர்வும் ஏற்படவில்லை.
சரக்கு புக்கிங் நிறுத்தம்!
எனவே லாரி உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தை வலுபடுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலமாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கத்தினர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக சரக்கு புக்கிங்கை நிறுத்தி விட்டனர்.
இதனால் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் 40 ஆயிரம் லாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே நிறுத்தப்பட்டு விட்டன. எனவே வடமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படும் சரக்குகள் தேங்க தொடங்கி உள்ளன. இதனால் கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகம், இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் உடன்பாடு ஏற்பட்டால் லாரி ஸ்ட்ரைக் வாபஸ் ஆகும்.
Leave a Reply