சென்னை: தமிழக சட்டசபை காலம் முடிவதையொட்டி வரும் மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய சட்டசபை உருவாக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருப்பதால் தேர்தலுக்கான முன்னற்பாடுகள் பணி துவங்கி வேகமாக நடந்து வருகிறது.
வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்டபணிகள் 80 சதம் நிறைவடைந்து விட்டது. மே மாதத்தின் 4 வார காலத்திற்கு முன்னதாக முறையான தேர்தல் பணிகள் துவங்கிவிடும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.இதில் ஒரே கட்டத்தேர்தல், பாதுகாப்பு, மற்றும் ஓட்டுக்கு பணம் ஆகியன குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி இன்று சென்னையில் அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., காங்., பா.ஜ., பகுஜன்சமாஜ், தேசியவாதகாங்., மற்றும் இடதுசாரி உள்ளிட்ட பிரமுகர்கள் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியும். தேர்தல் நடத்தும் நாள் மற்றும் அரசியல் கட்சியினரின் கோரிக்கைள் ஆகியன விவாதிக்கப்படுகிறது.
இன்று காலை சென்னை வந்தடைந்த குரேஷியை விமான நிலையத்தில் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டபோது இது வழக்கமான பணிதான், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாலையில் அறிவிக்கப்படும் என்றார். காலையில் அரசியல் பிரமுகர்களுடனும், மதியம் பாதுகாப்பு குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்.
Leave a Reply