புதுடில்லி : “முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பின்பற்றப்பட்ட ஸ்பெக்ட்ரம் கொள்கையையும் நாங்கள் ஆய்வு செய்ய விரும்புகிறோம்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அமலில் இருந்த “2ஜி’ ஸ்பெக்ட்ரம் கொள்கை 2001′ பற்றி விவரங்களை அரசு சமர்ப்பிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மோசடி நடந்ததாகவும், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.
நேற்று நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி முன், வழக்கு விசாரணைக்கு வந்த போது, தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா சார்பில் ஆஜரான வக்கீல் அந்தியார்ஜுனா கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அருண்ஷோஷாரி, தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோதும், அதன்பின் ஐ.மு., கூட்டணி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்த போது, இந்த துறையின் அமைச்சராக இருந்தவர் பதவிக் காலத்திலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 52 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம், யாரும் அவர்கள் மீது குற்றம் சொல்லவில்லை. அதே கொள்கையைப் பின்பற்றிய ராஜாவை மட்டும் எல்லோரும் குற்றம் சொல்கின்றனர்’ என்றார்.
இதையடுத்து சி.பி.ஐ., சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் வேணுகோபால் கூறுகையில், “2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பான விசாரணை 2011 பிப்ரவரிக்குள் முடிவடையும். இந்த வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பதில் சி.பி.ஐ.,க்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்றார்.
இதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:”2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கின் விசாரணை வரம்பை நீட்டிக்க விரும்புகிறோம். கடந்த 2001ம் ஆண்டில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், அந்த காலகட்டம் முதல் விசாரணை நடக்க வேண்டும் என விரும்புகிறோம்.இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் தான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு மேலான தொகையும் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு பாதகம் விளைவிக்க நாங்கள் விரும்பவில்லை. இருந்தாலும், 2001ம் ஆண்டில் என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டியது அவசியம். மேலும், இதை சி.பி.ஐ., தான் விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும்.
சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., என்ற இரட்டை தொழில்நுட்ப கொள்கை தொடர்பான அறிவிப்பை, 2009ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே, இது தொடர்பான சேவை வழங்குவோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை பற்றி ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தவும் இல்லை.கோர்ட்டுகளின் செயல்பாடும், அங்கு நடக்கும் வழக்கு விசாரணையும் அல்லது கோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவும் எந்த விதமான விமர்சனத்திற்கும் ஆளாகக் கூடாது. முன்சீப் கோர்ட்டாக அல்லது சுப்ரீம் கோர்ட்டாக இருந்தாலும் சரி, அரசியல் சட்டத்தையும், பொதுநலனையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும்.
வழக்கு விசாரணை பகிரங்கமாகவே நடைபெற வேண்டும். ஒவ்வொரு விவரமும் மக்களுக்கு தெரிய வேண்டும். பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகும் போது, சில நேரங்களில் மாறுபாடுகள் இருந்தாலும், அவை கோர்ட்டின் நடவடிக்கைகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, உத்தரவுகளை சீலிட்ட கவரில் வைத்து தருவது சரியான நீதி நிர்வாகமாக இருக்காது.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
“2ஜி’ ஸ்பெக்ட்ரமிற்கு சிறப்பு கோர்ட் : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கை விசாரிக்க சிறப்பு கோர்ட் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறியதாவது:குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, சிறப்பு கோர்ட் அமைப்பது பற்றி பரிசீலிக்கப்பட வேண்டியது அவசியம். மேலும், ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் போன்றவற்றின் நோக்கம் நிறைவேற வேண்டுமெனில், இதை செய்ய வேண்டும்.சிறப்பு கோர்ட் அமைக்க மத்திய அரசு தயாராக இல்லையெனில், ஊழலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் பலன் கிடைக்காது. இதுபோன்ற குற்றங்களை விசாரிக்க, பிரத்யேக கோர்ட்டுகளை அமைக்க இதுவே சரியான தருணம்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதை ஏற்றுக் கொண்ட சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் கூறுகையில், “இந்த வழக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. அதனால், சிறப்பு கோர்ட் பற்றி அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவை தெரிவிக்கிறேன்’ என்றார்.
Leave a Reply