புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு குறித்து பெரியளவில் கேள்விகளை எழுப்பும் சுப்ரீம் கோர்ட், தொலைத்தொடர்பு துறை செயலராக இருந்து, தற்போது ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவி வகிக்கும் தாமஸ் எப்படி விசாரணைகளை கண்காணிப்பார் என்று கேட்டு, அரசுக்கு இக்கட்டை ஏற்படுத்தியது.
ஏற்கனவே மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட தாமஸ் குறித்த வழக்கு விசாரணை நடக்கிறது. அது ஒருபுறம் இருக்க “2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக விசாரணை நடக்கிறது.
இதில் அரசு சார்பில் “ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நடக்கும் விசாரணைகளை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்கலாம்’ என்று கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் அசோக்குமார் கங்குலி ஆகிய இருவரும் இக்கருத்தை ஏற்கவில்லை.இது தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிபதி சிங்வி கூறுகையில், “சி.பி.ஐ., வழக்கை கண்காணிக்கும் நிலையில் உள்ள தாமஸ், தற்போது நடந்து வரும் வழக்கில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் எப்படி சாத்தியமாகும். ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஒருவர், எவ்வாறு ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நேர்மையாக செயல்பட முடியும்.
சி.பி.ஐ.,யின் அனைத்து பணிகளும் மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் கீழ் வருகிறது. எனவே இந்த விசாரணையை கண்காணிப்பது என்பது கஷ்டமானது’ என்றார்.
இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வதி, “இதுகுறித்து அரசிடம் ஆலோசித்து விட்டு பதில் அளிக்கிறேன்’ என்றார்.
சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வேணுகோபால் வாதிடுகையில், “ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும் போது, மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் தலைவருக்கு பதிலாக, ஆணையத்தில் உள்ள கமிஷனர்களில் ஒருவரை, தற்காலிகமாக விசாரணையை கண்காணிக்க அனுமதிக்க வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.
இதற்கு பொதுநல வழக்கு தொடரும் அமைப்பு சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், “இதற்கு ஆட்சேபனை இல்லை. தற்போது கமிஷனர்களில் ஒருவராக உள்ள ஸ்ரீகுமார், முன்பு கர்நாடக மாநில டி.ஜி.பி.,யாக இருந்தவர்.சிறந்த அதிகாரி என பெயர் பெற்றவர். அவரை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை. இருப்பினும் லஞ்ச ஒழிப்பு கமிஷனர் மட்டுமல்லாது மற்றொரு அதிகாரியை, விசாரணை ஒழுங்காக நடக்கிறதா என கண்காணிக்க நியமிக்க வேண்டும்’ என்றார்.
முன்னதாக சொலிசிட்டர் ஜெனரலும், சி.பி.ஐ., வக்கீல் வேணுகோபால் தாக்கல் செய்த பதிலில், “விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, நீதிமன்றம் கண்காணிப்பு செய்வதில் அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
இருப்பினும் வேணுகோபால், நீதிபதிகளிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். “மனுதாரர் கோரியது போல், வெளியில் இருந்து தனிப்பட்டவர்களை கண்காணிக்க நியமிக்க கூடாது’ என கேட்டு கொண்டார்.
மேலும் இதே பெஞ்ச் முன்பு நிரா ராடியா டேப் விவகாரம் குறித்த மனு விசாரணையில், “டெலிகாம் விவகார டேப் முழுவதும் விசாரணைகளுக்கு பிறகும் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டார்.
எல்லா துறைகளுமே சிலரது இஷ்டப்படி ஆட்டி வைக்கப்பட்டிருக்கிறது என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்ட போது, நீதிபதி சிங்வி பதிலாக, “சுற்றுச்சூழல் மாசை விட, டேப் மாசு பெரியளவில் இருக்கிறது’ என்று கருத்து தெரிவித்தார்.
தாமஸ் நீக்கப்படுவாரா?மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக உள்ள பி.ஜே.தாமசை பதவி நீக்கம் செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்த போது, துறையின் செயலராக இருந்தவரை, மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு தலைவராக நியமித்தது எப்படி என அரசை கேள்வி கேட்டுள்ளது சுப்ரீம் கோர்ட். ஸ்பெக்ட்ரம் விவகாரம் பல்வேறு வழிகளில் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது.இந்நிலையில், தாமஸ் தாமாக பதவி விலகினால், அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கோரி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை, தாமஸ் சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்கு பின் வெளியே வந்த தாமஸ், பத்திரிகையாளர்களுக்கு முகம் கொடுத்து பேசவில்லை.அவராக பதவி விலகுவாரா? அல்லது அரசு அவரை நீக்குமா? என்பது தான் இப்போதுள்ள கேள்வி.ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, பதவியை துறப்போர் பட்டியலில் அடுத்த நபராகி விட்டார் தாமஸ். அடுத்த கத்தி யாருக்கோ!மேலும் மத்திய உள்துறை அமைச்சர் நேற்று பேட்டி அளித்த போது, தாமஸ் ராஜினாமா எப்போது என்ற கேள்விக்கு “நோ கமென்ட்ஸ்’ என்று பதிலளித்தார்.
Leave a Reply