விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பெரும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.


இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.13,000 கோடி (300 கோடி டாலர்) செலவிட முடிவு செய்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சுமார் ரூ.4,500 கோடி (100 கோடி டாலர்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஹஜாரா தெரிவித்தார். கப்பல் கட்டும் தொழில் குறித்து அவர் கூறுகையில், ‘கப்பல் கட்டும் தொழில்துறையில் தென் கொரிய நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது. சீனாவில் இத்துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே அந்நாடு ஜப்பானை விஞ்சி, இரண்டாவது இடத்தை பிடிக்கும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. நம் நாட்டிலும் இத்துறையில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தில் பிற நிறுவனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் அடங்கும். ஏற்கனவே 32 கப்பல்களுக்கு ஆர்டர்கள் வழங்கியுள்ள இந்நிறுவனம், 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 30 புதிய கப்பல்களை வாங்க ஆர்டர்கள் அளிக்க உள்ளது. நடப்பு பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள் (2007-2012) ஒட்டுமொத்தத்தில் 62 புதிய கப்பல்களை இணைத்துக் கொள்ள உள்ளது. ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனம் அண்மையில் மூலதனச் சந்தையில் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. இப்பங்கு வெளியீட்டில் 5 மடங்குகளுக்கு அதிகமாக பங்கு கள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன. 8.46 கோடி பங்குகள் வெளியிடப்பட்ட நிலை யில், 41.64 கோடி பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறு வனம், ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றை ரூ.134-140 என்ற விலையில் வெளி யிட்டது. இதன் வாயிலாக இந்நிறுவனம் சுமார் ரூ.1,200 கோடி திரட்ட உத்தேசித்துள்ளது. விரிவாக்கத் திட்டத்திற்கு தேவையான மொத்த தொகையுடன் ஒப்பிடுகையில், பங்கு வெளியீடு வாயிலாக திரட்டப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவானது. எனவே, வளர்ச்சிப் பணிகளுக்காக தேவைப்படும் கூடுதல் நிதியை கடன்கள் மற்றும் உள்வள நிதி ஆதாரங்கள் வாயிலாக திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என ஹஜாரா மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *