சென்னை : “”வீரபாண்டி ஆறுமுகம் எனக்கு விடுத்துள்ள கொலை மிரட்டலைக் கண்டு ஒரு போதும் அஞ்ச மாட்டேன் ,” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் 126வது தொடக்க விழா மற்றும் வாசன் 46வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் சார்பில், அதன் தலைவர் தணிகைமணி தலைமையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில், அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு 100 மெத்தைகள் வழங்கும் விழா நடந்தது.
இதில் இளங்கோவன் பேசியதாவது: மூப்பனார் மகன் என்பதால் மட்டும் வாசனுக்கு கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு வரவில்லை. வாசனுக்கு எம்.பி., பதவி தர வேண்டுமென்று கூறிய போது அதை மறுத்தவர் மூப்பனார். இன்றோ தன் மகனை முதல்வராக்க துடிக்கும் தலைவரும் நம் நாட்டில் உள்ளார். கட்சியில் உள்ள வயதானவர்களை வாசன் சமாளிப்பது தான் எனக்கு அவரிடம் பிடித்த காரியம். ஏனெனில், எங்கள் கட்சியில் உள்ள பெரியவர்கள் ஒரு மாதிரியானவர்கள். அவர்களை நிச்சயம் என்னால் அரவணைத்து செல்ல முடியாது. நாட்டின் பெரிய தலைவர்கள் பலர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, அவர் சார்ந்திருக்கும் கட்சியில் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதனால் தான் என் தந்தையை கொச்சைப்படுத்தி பேசியும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தும் கட்சியின் தலைமையை திருப்திபடுத்த விரும்புகிறார். அவரின் மிரட்டலைக் கண்டு, நான் ஒரு போதும் அஞ்ச மாட்டேன். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், தமிழக காங்கிரஸ் பொருளாளர் சுந்தர வடிவேலு, தென் சென்னை காங்கிரஸ் தலைவர் மங்கள்ராஜ், முன்னாள் கைத்தறி வாரிய உறுப்பினர் ரங்கபாஷ்யம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் தரம்சந்த், துணை தலைவர் சுரேஷ் ஆனந்த் கலந்து கொண்டனர்.
Leave a Reply