புது தில்லி, டிச. 20: ஜனவரி 15-ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தாற்காலிகமாக தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு கிலோ வெங்காயம் ரூ.30-க்கு விற்கப்பட்ட நிலையில் கிடுகிடுவென விலை உயர்ந்து இப்போது ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது.
கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தேசிய விவசாய கூட்டுறவு, சந்தை கூட்டமைப்பு சார்பில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், புதிதாக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே அனுமதி பெற்ற நிறுவனங்கள் ஏற்றுமதியை மேற்கொள்ள முடியாத வகையில் குறைந்தபட்ச வெங்காய விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
விலை கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பதால் ஏற்றுமதி நடைபெறாது என்றும், ஜனவரி 15 வரை புதிதாக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply