வெளிநாட்டில் நிரந்தர தங்குமிட அனுமதிப் பற்றி பல மாணவர்களுக்கு தெரிவதில்லை
அவர்கள் முகவர்களால்(ஏஜென்ட்) தவறாக வழிகாட்டப்படுகிறார்கள். இதனால் வெளிநாட்டில் நிரந்தரமாக குடியேறலாம் என்று நினைத்து செல்பவர்கள், தங்கள் படிப்பு முடிந்ததும் தாய்நாடு திரும்ப வேண்டியுள்ளது. நிரந்தர தங்குமிட அனுமதி என்பது மாணவர்களுக்கு அவர்களின் பணி அனுபவத்துடன், அதன் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும். படிப்பு முடியும்போது தானாக கிடைத்துவிடாது. எனவே இது சம்பந்தமாக நாங்கள் இங்கே பல ஆலோசனைகளை தருகிறோம்.
உங்கள் முகவர் மற்றும் ஆலோசகரை மதிப்பிடல்:
மனசாட்சிக்கு அஞ்சாத முகவர்கள் பலர், மாணவர்களின் திறமை மற்றும் ஆர்வத்தைப் பற்றி கவலைப்படாமல் அவர்களின் வெளிநாட்டு படிப்புகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர். மாணவர்களிடம் கணிசமான தொகையைப் பெற்றுக்கொண்டு, போலியான ஐ.இ.எல்.டி.எஸ் சான்றிதழுக்கு ஏற்பாடு செய்தல், சமையல் கலை மற்றும் முடித்திருத்தும் கலை போன்ற படிப்புகளுக்கு மாணவர்களை நிரந்தர குடி ஏறுதலுக்கான நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கின்றனர்.
ஏதாவது ஒரு காரணத்திற்காக வெளிநாடு செல்லத் துடிக்கும் ஆயிரக்கணக்கானோர், போலி சான்றிதழ் மற்றும் போலி ஆவணங்களை தயார்செய்ய முகவர்களிடம் ஏராளமாய் பணம் தருகின்றனர். ஆனால் இதே சூழலில் பல நேர்மையான நபர்களும் தேவையின்றி, அநியாயமாக முகவர்களால் ஏமாற்றப்படுகின்றனர். எனவே நீங்கள் படிப்பு, அதைத் தொடர்ந்து குடிபெயர்தல் போன்ற நோக்கங்களுக்கு முகவர்களைத் தேடிச்செல்லும்போது, நம்பகமான மற்றும் புகழ்பெற்ற ஆட்களிடம் செல்லுங்கள் மற்றும் முகவர் பற்றி நண்பர்கள், உறவினர்கள் அல்லது பழைய மாணவர்களிடம் கேளுங்கள். உங்கள் ஆலோசகர் அல்லது முகவர் ஆகியோரின் அறிவுநிலை, குறிப்பிட்டத் துறையில் மதிநுட்பம் மற்றும் உங்கள் இலக்கை அடையும்பொருட்டு தரமான சேவையை வழங்குபவர்களா? என்பதைக் கண்டறியவும்.
போலி விளம்பரங்கள் பற்றி கவனமுடன் இருக்கவும்:
“சம்பாதியுங்கள் மற்றும் கற்றுக்கொள்ளுங்கள்” என்றும், பிரிட்டனிலுள்ள கல்லூரிகளில் மிகக் குறைந்த செலவில் படிப்பது சம்பந்தமாக “லண்டன் கனவுகள்” என்றும் வரும் விளம்பரங்கள் போலியானவை. ஏனெனில் அங்கே சென்ற பல மாணவர்கள் அதிக செலவால் சாப்பிட பணமின்றி, குருத்வாராக்களில் இலவச உணவை சாப்பிட்டுக் கொண்டு, தங்குவதற்கு மட்டுமே பணம் செலவழிக்கின்றனர். வேலை என்பது எளிதில் கிடைக்கக்கூடியதல்ல மற்றும் பல பல்கலைக்கழகங்கள் சாதாரண வகுப்பறையைத் தவிர எந்த வசதிகளும் இல்லாதவை என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குடியேறுதல் ஆர்வம்கொண்ட மாணவர்கள், குடிஏற்றத்துக்குப் பிறகான வாழ்வைப் பற்றி சிறிதளவே திட்டமிடுகிறார்கள். எனவே அவர்களில் பலர் எதிர்காலத்தில், அந்தந்த நாடுகளில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு ஏதாவது பணியில் சேரும் நிலை ஏற்படுகிறது.
பெற்றோர்களின் கவனத்திற்கு:
பல மாணவர்கள், ஏன் அதைவிட அவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டுப் படிப்பு மற்றும் வாழ்க்கைக்காக முகவர்களிடம் &’எது வேண்டுமானாலும் செய்யுங்கள்&’ என்கின்றனர். அதற்காக அதிக தொகை கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். தற்போது ஆஸ்திரேலியாவில் நிலைமை சிக்கலாகி விட்டதால், மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கனடா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு எப்படியாவது சென்று அங்கேயே குடியேறி விடவேண்டும் என்று நினைக்கின்றனர். மேலும் தாங்கள் செல்ல விரும்பும் நாடுகளில் தங்களின் உறவினர்கள் இருந்தால் அவர்களின் மூலம் போலி சான்றிதழ், போலி திருமண ஒப்பந்தம் தயார்செய்து அங்கே செல்ல ஏற்பாடு செய்தல் போன்ற சட்டவிரோத செயல்களை பெற்றோர்களும், மாணவர்களும் செய்யத்துணிந்து பல ஆபத்துகளை சந்திக்கின்றனர்.
போலி சான்றிதழ்கள் வேண்டாமே!
போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதாலேயே பலருக்கு விசாக்கள் மறுக்கப்படுகின்றன. மேலும் விசா நடைமுறையில் போலி ஆவண முயற்சி கண்டுபிடிக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட நாட்டிற்கு செல்வதற்கு பத்து வருடங்கள் வரை தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது, அதைத்தவிர வேறு பல நாடுகளும் தடை விதிக்கக்கூடும். எனவேதான் தூதரகங்கள் இந்த மோசடியைத் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்த வரிசையில் நியூசிலாந்து, குடிபெயர்வோர் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க, லைசன்ஸ் வழங்கப்பட்ட குடியேற்ற ஆலோசகர்களை மட்டுமே அங்கீகரிக்கிறது.
இந்தியாவே ஒரு தங்கச் சுரங்கம்தான்!
வெளிநாட்டு படிப்பு முடித்தோ அல்லது வேலையிலிருந்தோ இந்தியா திரும்புபவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் இங்கேயே உள்ளன. அதனால்தான் பல வெளிநாட்டினர் கூட வேலைக்காக இங்கு வரத்தொடங்கியுள்ளனர். இந்தியாவில் நிலையான வளர்ச்சிக்கான உத்திரவாதம் இன்று உள்ளது. எனவே நீங்கள் இந்தியாவிலேயே சாதிக்க நினைத்தால் அது சரியான முடிவுதான். அதேசமயம் ஒரு சட்ட நிபுணர் அல்லது கணக்காளர்(அக்கவுண்டன்ட்) அலுவலகங்களை ஆலோசனைக்காக நாடிச் செல்கையில், அவர்களின் புகழ் மற்றும் அங்கீகாரத்தை விசாரிக்காது செல்ல வேண்டாம்.
முகவர் மற்றும் ஆலோசகர் விஷயத்தில் சரிபார்க்க வேண்டியவை:
* உங்கள் முகவரின் நன்மதிப்பு மற்றும் தங்களை நாடி வருபவர்களுக்கு எந்தளவுக்கு துணையாக இருக்கிறார்கள் என்பது.
* அவர்கள் எவ்வளவு காலமாக இந்த துறையில் இருக்கிறார்கள் என்ற மதிப்பீடு.
* மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் வாங்கும் கட்டணம்.
* அவர்களின் வலைத்தளத்திலும் அரசின் வலைத்தளத்திலும் உள்ள அவர்களைப் பற்றிய மதிப்பீடுகள்.
* பணத்தை திரும்ப பெறுவது சம்பந்தமாக எழுத்து மூலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுதல்.
* ஒரு விண்ணப்பத்திற்கு பதிலளிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் செயல்பாட்டிற்கான காலகட்டம்
போன்ற அம்சங்கள் நிச்சயம் ஆராயப்பட வேண்டும்.
செய்யக்கூடாதவை:
* போலி ஆவணங்களை தயார் செய்தல்
* சேவையின் தரம் பற்றி தெரியாமல் முகவர்களுக்கோ, ஆலோசகர்களுக்கோ அதிகப் பணத்தைக் கொடுத்தல்
விசா பெறுவதில் சரியான வழிமுறைகளைக் கையாண்டால் பின்னாளில் எப்போதும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதில்லை.
விசா நடைமுறைகளில் அவசியம் தெரிய வேண்டிய, சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்:
பிரிட்டன்:
நிதி ஆதாரங்கள் குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு சேமிப்பில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மட்டுமே மாணவர்களுக்கு பணம் கொடுக்க முடியும்.
ஆஸ்திரேலியா:
அதிகபட்சம் 2 வருடங்களுக்கு, தங்களின் படிப்பு காலத்தில் செலவாகக்கூடிய நிதி ஆதாரங்களை காண்பிக்க வேண்டும். பி.எச்டி படிப்புகளுக்கு மட்டும் ஒரு வருட நிதி ஆதாரம் போதுமானது.
நிதியானது 3 மாதங்கள் வரை சேமிப்பில் வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பெற்றோர், தாத்தா-பாட்டிகள், உடன் பிறந்தவர்கள் மற்றும் வேறு தனிநபர்களும் நிதிவழங்க முடியும். மேலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நிரந்தர குடிமக்களாக இருக்கும் மற்ற உறவினர்கள் நிதி செலுத்தலாம்.
நியூசிலாந்து:
இங்கு மாணவர்கள் தங்கள் ஒரு வருடத்திற்கான கட்டணத்தொகை மற்றும் பிற செலவினங்களுக்கான நிதி ஆதாரங்களை காண்பித்தாலே போதுமானது.
கனடா:
இங்கு தங்கள் கல்வி காலம் முழுவதற்குமான தொகையை காண்பிக்க வேண்டும். பெற்றோர் அல்லது ரத்த சொந்தங்கள் மட்டுமே தொகை வழங்க முடியும்(குறிப்பாக இந்தியாவிலிருந்து).
அமெரிக்கா:
மாணவர்கள் ஒரு வருடத்திற்கான நிதி ஆதாரத்தை காண்பித்தால் போதுமானது. அது வங்கி கடனாகவோ, சேமிப்பாகவோ இருக்கலாம். இரண்டாம் வருடத்திற்கான தொகையை பெற்றோர் மட்டுமே செலுத்த முடியும். நிதி ஆதாரம் குறைந்தது 6 மாதங்கள் சேமிப்பில் இருந்திருக்க வேண்டும் மற்றும் அதை வழங்குபவர் வருமான வரி கணக்குகளை காண்பிக்க வேண்டும்.
Leave a Reply