புதுடில்லி : “2ஜி’ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விசாரணை, 2001 முதல் 2008ம் ஆண்டு வரை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
விசாரணையின் போது யாருடைய நிர்பந்தத்திற்கும் கட்டுப்பட வேண்டியது அவசியம் இல்லை என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், “விசாரணையின் நிலை அறிக்கையை சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், 2011, பிப்ரவரி 10ம் தேதி, சீலிட்ட கவரில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும். தகுதியில்லாத நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதில், உண்மையிருப்பதாக தெரிகிறது’ என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏல நடைமுறையை பின்பற்றாததால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. எனவே, “2ஜி’ ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் உள்ள முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, பொதுநல அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இம்மனு மீதான விசாரணை, கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, சி.பி.ஐ.,யும் அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். எந்த உயர் பதவியில் இருக்கும் தனி நபர் மற்றும் ஏஜன்சிகளின் நிர்பந்தங்களுக்கும் கட்டுப்படாமல்,விசாரணை நடத்தப்பட வேண்டும். கடந்த 2001 முதல் 2008ம் ஆண்டு வரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட தொலைத்தொடர்பு கொள்கை பற்றி விசாரிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதற்கு, விசாரணையின் போது அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இந்த விசாரணையின் நிலை அறிக்கையை, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், 2011, பிப்ரவரி 10ம் தேதி, சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்து விட்டதால், இந்த மோசடி பற்றி விசாரிக்க சிறப்புக் குழு எதையும் அமைக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணை மேற்கொள்வர் என, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியமும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் வேணுகோபாலும் உறுதி அளித்துள்ளதால், சிறப்புக்குழுவுக்கு அவசியம் இல்லை.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Leave a Reply