டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 11 ஆயிரம் கோடி வரை பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ளது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி இருவரும் வியப்பும் திகைப்பும் தெரிவித்துள்ளனர்.
2 ஜி உரிமம் பெறுவதற்காக சில தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள். இன்னொரு பக்கம், சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு டெலிகாம் உரிமைகள் கிடைக்கக் கூடும் என்ற யூகத்தின் அடிப்படையில் பல கோடி ரூபாயை கடனாகக் கொடுத்துள்ளன இந்த வங்கிகள்.
இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட இந்த கடன் விவரங்களை அறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “இது உண்மையாக இருந்தால் திகைக்க வைக்கிறது. அதெப்படி வெறும் யூகத்தின் அடிப்படையில் இவ்வளவு பெரும் தொகை கடனாக வழங்கப்பட்டது?” என்று கேட்டனர்.
பொது நல வழக்கு மைய அமைப்பின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனுவில், “2ஜி அலைக்கற்றை கிடைக்கும் என்ற ஊகத்தின் அடிப்படையில்தான் வங்கிகள் இவ்வளவு கோடிகளை கடனாகக் கொடுத்திருக்கின்றன. நாட்டின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ரியல் எஸ்டேட் நிறுவனமான யுனிடெக்குக்கு ரூ 2500 கோடி கடன் வழங்கி உள்ளது…” என்று குறிப்பிட்டிருந்தார்.
தேசியவங்கிகள் அப்பட்டமாக அனைத்து விதிகளையும் மீறி ரூ 10 ஆயிரம் கோடி கடன் கொடுத்திருப்பது பொது நலன் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
வங்கிக் கடன் தொடர்பான விவகாரத்தை தனியாகத்தான் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்தார்.
2ஜி வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் தான், கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறினார்.
வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவனத் தலைவர் நீரா ராடியாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடந்த உரையாடலில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று பிரசாந்த் பூஷண் கூறினார்.
உண்மைத்தன்மையைக் கண்டறியங்கள்:
அப்போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதிகள் தொலைபேசி உரையாடலை ஆய்வு செய்து அதன் உண்மைதன்மை தெரியும்வரை நாங்கள் இதில் கருத்துக் கூறக்கூடாது. நீங்கள் சொல்லும் வார்த்தைகள் நாளை தலைப்புச் செய்திகளாக வந்துவிடும் என்று நீதிபதிகள் கூறினர்.
நான் அந்த உரையாடலைக் கேட்டேன் என்று பூஷண் கூறியபோது, இந்த துறையில் நீங்கள் நிபுணர் என்று நாங்களே நினைத்துக் கொள்ளவா என்று கூறிய நீதிபதிகள் தொலைபேசி உரையாடல் பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
Leave a Reply