ஹனீப்பிடம் மன்னிப்பு கேட்டது ஆஸி.அரசு

posted in: உலகம் | 0

மெல்போர்ன் : பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய டாக்டர் முகமது ஹனீப்பிடம், ஆஸ்திரேலியா அரசு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.

கடந்த 2007ல் பிரிட்டனின் கிளாஸ்கோ நகர விமான நிலையத்தை தாக்க முயன்ற பயங்கரவாதி சபீல் அகமது. இவருடைய ஒன்று விட்ட சகோதரர் முகமது ஹனீப். ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணியாற்றிய இந்தியரான முகமது ஹனீப்புக்கு கிளாஸ்கோ நகர விமான நிலைய தகர்ப்பு முயற்சியில் தொடர்பு உள்ளதாகக் கூறி, ஆஸ்திரேலிய அரசு அவரை கைது செய்து 12 நாட்களுக்கு சிறையில் அடைத்தது. இவரது விசா உடனடியாக ரத்து செய்யப்பட்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். தீவிர விசாரணையில் இவர் குற்றமற்றவர் என்பது தெரிந்தது. இதையடுத்து மீண்டும் இவருக்கு விசா வழங்கப்பட்டது. தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்டில் முகமது ஹனீப் பணியாற்றி வருகிறார். மீண்டும் அவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்புகிறார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈடு கோருவதற்காக குடும்பத்துடன் ஆஸ்திரேலியா வந்துள்ளார். பிரிஸ்பேன் நகரில் இவருடைய வக்கீல் ரோட் ஹாட்சன் மூலம், ஆஸ்திரேலிய அரசுடன் நடந்த நஷ்ட ஈடு குறித்து பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஹனீப் சார்பில் 4.5 கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக ஹனீப்பின் வக்கீல் ஹாட்சன் தெரிவித்துள்ளார். தவறான குற்றச்சாட்டு ஹனீப் மீது சுமத்தப்பட்டதால், குடியேற்றத்துறை அமைச்சர் கெவின் ஆன்ட்ரூஸ் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நஷ்ட ஈடு கிடைத்ததும் இந்த வழக்கை ஹனீப் வாபஸ் பெறுவார், என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், “ஹனீப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு எதிர்பாராதது, இதற்காக அவரிடம் மன்னிப்பு கோர முடியாது’ என, கெவின் தெரிவித்துள்ளார். ஆனால், ஹனீப்புக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக ஆஸ்திரேலிய அரசின் சார்பில், அட்டர்னி ஜெனரல் துறை சார்பில் பகிரங்க மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. “ஹனீப் அப்பாவி, அவருக்கும் விமான நிலைய தகர்ப்பு சதிக்கும் தொடர்பில்லை’என, ஆஸ்திரேலிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *