நாட்டின் மருத்துவர் பற்றாக்குறையை போக்க, 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க எம்.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
நம் நாட்டில் மருத்துவர் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. பெருகிவரும் நோயாளிகளுக்கான மருத்துவர் எண்ணிக்கை போதவில்லை. எனவே இந்த பற்றாக்குறையை போக்குவதற்கு, வரும் கல்வியாண்டு முதல், நாட்டில் தற்போதுள்ள 35 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்களை, 45 ஆயிரம் என்ற அளவில் அதிகரிக்க இந்திய மெடிக்கல் கவுன்சில்(எம்.சி.ஐ.) முடிவு செய்துள்ளது.
தலைவர் ஷிவ்குமார் சரின் தலைமையில் நடைபெற்ற எம்.சி.ஐ. நிர்வாக வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் புதிதாக 66 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு முன்பு இருந்த நிபந்தனையான 25 ஏக்கர் என்ற நில வரம்பை, 10 ஏக்கர் என்ற அளவில் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான இடம் எளிதாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
மேலும், புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ராணுவம், ரயில்வே மற்றும் மாநில பணியாளர் காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றுடன் எம்.சி.ஐ. பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. ஏனெனில் இந்த துறைகளிடம் இருக்கும் நிலங்கள் ஏராளம்.
ராணுவ அதிகாரிகள் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும், தங்களின் பிள்ளைகளுக்கு, ராணுவ வளாகங்களிலுள்ள மருத்துவ கல்லூரிகளில் சட்டப்படி இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் தயங்கினர். ஆனால் எம்.சி.ஐ., மேற்கண்ட 3 துறைகளையும் கவர, வேறு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, அந்தந்த துறை வளாகங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படித்து வெளிவரும் பட்டதாரிகள், குறிப்பிட்ட ஆண்டுகள் அந்தந்த துறையின் மருத்துவ தேவைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை சம்பந்தப்பட்ட துறைகள் விதிக்கலாம் என்பதுதான் அது.
மேலும் மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் ஆசிரிய பணியாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக, ஓய்வு வயதை 65 -இலிருந்து 70 -ஆக அதிகரிக்கவும் எம்.சி.ஐ. பரிந்துரைத்துள்ளது.
Leave a Reply