சென்னை : போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 2,000 முதல் 4,543 ரூபாய் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வும், படிகளில் உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, 520 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. சம்பள உயர்வு குறித்த சதவீதம் அறிவிக்கப்படாததால் தொழிலாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம், அதை சார்ந்த பணி நிலைமைகள் குறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவைப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை, தரமணி, சாலை போக்குவரத்து நிறுவனத்தில் (ஐ.ஆர்.டி.,) போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு தலைமையில் மூன்று கட்டமாக நடந்தது. இதில், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, தொ.மு.ச., பேரவைத் தலைவர் குப்புசாமி, பொதுச் செயலர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், அமைச்சர் நேரு கூறியதாவது: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதியம், 2,000 முதல் 4,543 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மூன்று முறை தொழிலாளர்களுக்கு ஆய்வு பயன்கள்(பதவி உயர்வு) அளிக்கப்பட்டு வருகிறது. அது ஐந்து முறை மாற்றப்பட்டுள்ளது. சம்பள முரண்பாடும் சரி செய்யப்பட்டுள்ளது. குடும்ப பாதுகாப்பு திட்டப்பயன், 1.50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்காக மாதம் 30 ரூபாய் ஊழியர்களிடம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த ஊதிய உயர்வு பயன்களை, 33 ஆயிரத்து 929 ஓய்வூதியதாரர்களும் அடைவார்கள். சலவை படி 80 ரூபாயாகவும், தனி பேட்டா 10 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. ஸ்டியரிங் படி ஒரு ரூபாயும்; இரவு தங்கும் படி ஆறு ரூபாயும், இரவுப் பணி நான்கு ரூபாயும், சிப்ட் படி ஆகியவையும் உயர்த்தப்பட்டுள்ளது. தையல் கூலி படி ஆண்களுக்கு 200 ரூபாயாகவும், பெண்களுக்கு 150 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த செப்டம்பரில் இருந்து அமல்படுத்தப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர்கள், அனைத்து புறநகர் பஸ்களிலும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். மற்ற பிரச்னைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பேரவையுடன் பேசி முடிவு செய்து வரும் ஜனவரி 15ம் தேதிக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் நேரு தெரிவித்தார்.
பேரவைத் தலைவர் குப்புசாமி, பொதுச் செயலர் சண்முகம் ஆகியோர் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. ஊதிய உயர்விற்காக நாங்கள் 600 கோடி ரூபாய் கோரியிருந்தோம். இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையின்போது 420 கோடி ரூபாய் ஒப்புக்கொள்ளப்பட்டது. தற்போது, முதல்வர் 520 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளார்’ என்றார். பட்டாசு வெடித்த தொ.மு.ச., பிரதிநிதிக்கு பளார்: ஊதிய உயர்வு குறித்த விவரம் தனித்தனியாக பிரித்து அறிவிக்கப்பட்டது. எத்தனை சதவீத உயர்வு என சரியாக தெரியாததால், பத்திரிகையாளர்கள் குழப்பமடைந்தனர். அமைச்சரும் இது குறித்து விளக்கவில்லை. இதே குழப்பம் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டது. அதனால், பேச்சுவார்த்தை முடிந்து அமைச்சர் வெளியே போன பிறகும் வெடி வெடிக்காமல் மவுனம் காத்தனர். இந்நிலையில், தொ.மு.ச.,வின் ஒரு பிரிவைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் திடீரென வெடியை கொளுத்தி போட்டார். அந்த நபரை மற்ற உறுப்பினர்கள் சுற்றி வளைத்தனர். “யாரைக்கேட்டு வெடி வெடித்தாய்’ எனக் கூறி, அந்த நபரின் கன்னத்தில் அறைந்தனர். பலர் அவரை தாக்க பாய்ந்தனர். அங்கிருந்த சிலர் அந்த நபரை காப்பாற்றி வெளியே அனுப்பி வைத்தனர்.
பத்திரிகையாளர்களை அலைய விட்ட அமைச்சர் : தரமணி, ஐ.ஆர்.டி.,யில் நேற்று காலை நடந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பான செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பேச்சுவார்த்தை முடிந்ததும் வெளியே வந்த அமைச்சரை, பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அவரோ, “ஒப்பந்த முடிவுகள் குறித்து அறிவாலயத்தில் முதல்வர் அறிவிப்பார்’ எனக் கூறி காரில் ஏறி பறந்தார். பத்திரிகையாளர்களில் பலர், அறிவாலயத்திற்கு படையெடுத்தனர். அங்கு, உள்ளே சென்று சில நிமிடங்களில் வெளியேறிய அமைச்சர், “ஊதிய ஒப்பந்த அறிவிப்பை முதல்வர் என்னையே வெளியிடும் படி கூறி விட்டார். எனவே, நீங்கள் எல்லாரும் ஐ.ஆர்.டி., வந்து விடுங்கள். நீங்கள் வரும் வரை காத்திருக்கிறேன்’ என்றார். ஆனால், ஐ.ஆர்.டி.,க்கு பத்திரிகையாளர்கள் வருவதற்குள் அமைச்சர் ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனால், பத்திரிகையாளர்கள் பலர் அதிருப்திக்குள்ளாகினர்.
Leave a Reply