திண்டுக்கல் : அனைவருக்கும் வங்கி சேவை திட்டத்தின் கீழ், ஐ.ஓ.பி., சார்பில் மொபைல் மினி ஏ.டி.எம்.,சேவை தற்போது 277 கிராமங்களில் துவக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டத்தில் 56 கிராமங்களில் மினி ஏ.டி.எம்மை துவக்கி வைத்து ஐ.ஓ.பி., முதுநிலை மண்டல மேலாளர் அன்பு, தேசிய ஊரக வங்கி பொது மேலாளர் ரமேஷ், கனரா வங்கி உதவி பொது மேலாளர் செல்வராஜ் ஆகியோர் திண்டுக்கலில் கூறியதாவது: அனைவருக்கும் வங்கி சேவை அளிக்கும் திட்டத்தில், தமிழகத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும், 277 கிராமங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் மினி ஏ.டி.எம்., சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதற்கென நியமிக்கப்பட்ட சேவையாளரிடம் வங்கி சார்பில் மொபைல் ஏ.டி.எம்., இயந்திரம் கொடுக்கப்படும். பேசும் வசதியுடன், ஆன்-லைன் சேவையில் இயங்கும் இந்த இயந்திரத்தில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கியவர்களுக்கு வீடு தேடி வந்து பணம் அளித்தல், டிபாசிட் செய்யும் பணியை சேவையாளர் மேற்கொள்வார்.
இந்த சேவையில் பணம் எடுக்க, டிபாசிட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படும். பின்னர், அடையாள அட்டையை பயன்படுத்தி தேவையான பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த மினி ஏ.டி.எம்., இயந்திரத்தின் மூலம் வாடிக்கையாளருக்குத் தெரியாமல் பணம் எடுக்க முடியாது. முதலில் வீடுதேடி வரும் வங்கி சேவையாளர் கைரேகை வைத்து, அடையாள அட்டை செலுத்திய பிறகு வாடிக்கையாளர் ரேகை பதிவு செய்து, அடையாள அட்டை உதவியுடன் பணம் எடுக்கலாம். ஒரு முறை அதிகபட்சமாக 2,000 வரை எடுக்கலாம். வங்கி சேவையாளரிடம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஐ.ஓ.பி., முதுநிலை மேலாளர் முருகேசன், கம்ப்யூட்டர் மேலாளர் செல்லமுத்து உட்படபலர் பங்கேற்றனர்.
Leave a Reply