இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரமோஸ் எனும் அதி நவீன ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை முதன் முதலாக கடந்த 2001-ம் ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது.
தொடர்ச்சியாக நடந்த சோதனைகளில் வெற்றி கிடைத்ததால் கடந்த 2005-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் “பிரமோஸ்” ஏவுகணைகள் சேர்க்கப்பட்டன.
பிரமோஸ் ஏவுகணையில் அதி நவீன வசதிகள் உள்ளன. 8.4 மீட்டர் நீளம் கொண்ட இது திட, திரவ உந்து சக்திகளால் பாயும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 290 கி.மீ. தூரத்துக்கு இதை செலுத்த முடியும்.
பிரமோஸ் ஏவுகணைகள் 300 கிலோ வெடிபொருட்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இடத்தை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இந்த ஏவுகணையை கப்பல், நீர் மூழ்கி கப்பல், பறக்கும் விமானம் மற்றும் தரையில் நகரும் லாஞ்சர்கள் என்று பல வழிகளிலும் பயன்படுத்த முடியும்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் பிரமோஸ் ஏவுகணை சேர்க்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இன்று பகல் 11 மணிக்கு மீண்டும் பிரமோஸ் ஏவுகணை சோதனை நடந்தது. இதற்காக ஒரிசா கடற்கரையோரம் உள்ள சந்திப்பூர் பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்து வரும் 401 குடும்பங்களைச் சேர்ந்த 3220 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
திட்டமிட்டபடி 11 மணிக்கு பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. அப்போது பிரமோஸ் ஏவுகணை ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் சென்று சாதனை படைத்தது.
பிரமோஸ் ஏவுகணைகள் குறிப்பிட்ட மிக குறுகிய இடத்தையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் உடையது. இதன் மூலம் எல்லையோரங்களில் உள்ள தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு கூட சேதம் ஏற்படாதபடி தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply