சென்னை: அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது என துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அண்மைக்காலமாக பல்வேறு புதிய தொழில்களிலும், அவை சார்ந்த உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கும் மாநிலமாக தமிழகம் உருவாகி வருகிறது. உதாரணமாக, மின்னணு பொருள்கள் உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில்கள், ரப்பர்-பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, சுற்றுலா, மருத்துவ சேவை என பல்வேறு தொழில்களில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உருவாகி வருகிறது.
நாட்டில் அமைந்துள்ள மோட்டார் வாகன உதிரிபொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் 350 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இது, மொத்த உற்பத்தியில் 35 சதவீதம். தொழில் உற்பத்தி மதிப்புக்கூட்டும் பணிகள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, தொழிலாளர்களின் எண்ணிக்கை, முதலீடுகளை ஈர்த்தல் போன்ற பல்வேறு அம்சங்களில் முதல் இடம் வகிக்கும் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதியில் ஏறக்குறைய 18 சதவீதம் தமிழகத்தில் இருந்து செய்யப்படுகிறது. அதேபோன்று, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருள்களில் பெரும்பங்கு தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக தொழில் முனைவோருக்கு வழிகாட்டக் கூடிய அமைப்பினை ஏற்படுத்தி தொழில்நுட்பத் தகவல்கள், வர்த்தகப் புள்ளி விவரங்கள் ஆகியவற்றை தமிழக அரசு வழங்குகிறது.
இனி மின் வெட்டே இருக்காது!
தமிழகத்தைப் பொறுத்தவரை, தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மின் உற்பத்தியை பொறுத்த அளவில், ரூ 33.2 கோடி முதலீட்டில் மின் திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் தொடங்கி செயல்படுத்தி வருகிறோம்.
இந்தத் திட்டங்களின் மூலமாக 2012-ம் ஆண்டு முதல் மின்வெட்டு இல்லாத ஒரு நிலையை தமிழகம் அடையும் என எதிர்பார்க்கலாம்.
சாலை வசதிகளை மேலும் மேம்படுத்தும் பணிகளும், சென்னை, எண்ணூர் போன்ற துறைமுகங்களை விரிவுபடுத்தும் பணிகளும், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன,” என்றார்.
Leave a Reply