அரசு கேபிள் “டிவி’ குறித்து சட்டசபையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : தா. பாண்டியன்

posted in: அரசியல் | 0

விருதுநகர் : “”அரசு கேபிள் “டிவி’ குறித்து, வரும் சட்டசபை தொடரில், வரவு-செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் போது, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,” என, இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு பிப்ரவரியில் இடைக்கால வரவு-செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. தமிழக சட்டசபை ஒப்புதலுடன் அரசு கேபிள் “டிவி’ அமைக்க துறை ஒதுக்கப்பட்டது. அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். கருவிகள் வாங்கி, அலுவலகங்கள் துவக்கப்பட்டன. இதற்கு அரசு 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

இயங்காத துறைக்கு அதிகாரிகளுக்கு சம்பளம், செயல்படாத அலுவலகங்களுக்கு வாடகை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து வரும் சட்டசபை தொடரில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தனியார் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் கேபிள் இணைப்புகளை, குறைந்த கட்டணத்தில் வழங்க அரசு முன்வர வேண்டும். இரண்டு கோடியே 50 லட்சம் கேபிள் இணைப்புகள் தனியார் நிறுவனங்களான சுமங்கலி கேபிள், ராயல் கேபிள் நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன. ஒரு இணைப்புக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் மாத கட்டணம் என எடுத்து கொண்டாலும், மாதம் 250 கோடி ரூபாய் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு 9,000 கோடி ரூபாய் முதல்வரின் குடும்பத்திற்கு சென்றுள்ளது.

“ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்’ என அறிவித்த முதல்வர், இலவசமாக கொடுத்ததற்கு கட்டணங்கள் வசூலிப்பது தொடரும் என அறிவிக்க வேண்டும். அரசு பெற்றுள்ள கடன் 91 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஆண்டுக்கு வட்டி மட்டும் 14 ஆயிரம் கோடி ரூபாய் கட்ட வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் கன மழையால் கிடைத்த 610 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து, நீரை சேமிக்க ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தை மத்திய அரசிடம் நிதி பெற்று செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தா.பாண்டியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *