சென்னை : “ஊராட்சி ஒன்றிய மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய மருந்தகத்தில் பணியாற்றும் பாலையா என்பவர் உள்ளிட்ட ஆறு பேர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். இவர்கள் சார்பில், வக்கீல் இளம்வழுதி ஆஜரானார். நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு; பணி வரன்முறை கோரி நிர்வாக தீர்ப்பாயத்தை இவர்கள் அணுகும்வரை, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. தீர்ப்பாயத்தை அணுகியதால், இவர்களுக்கு அது மறுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளது. விடுமுறை நாட்களுக்கு சம்பளம் பெற ஊழியர்களுக்கு உரிமையுள்ளது என உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையின் உதவி இயக்குனர் கூறியுள்ளார். மஸ்தூர்களாக பணியாற்றும் மனுதாரர்களைப் போன்றவர்களுக்கு சம்பளம் வழங்க ஆட்சேபமில்லை என, உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை கூறியுள்ளது.
அரசின் ஏஜன்சியான ஊராட்சி நிர்வாகம், ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். விடுமுறை தினங்களுக்கு சம்பளம் வழங்க மறுப்பது என்பது, ஊழியர்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரம் மற்றும் விடுமுறையை மகிழ்ச்சிகரமாக கழிப்பதை மறுப்பது போலாகும். எனவே, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் நடவடிக்கையானது, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது போலாகும். மனுதாரர்கள் கோரிய நிவாரணம் நியாயமானது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களுக்கு, மனுதாரர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய மருந்தகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேல் இவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி வரன்முறை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், வரன்முறை செய்யப்படவில்லை. பணி வரன்முறை கோரியும், பணியில் இருந்து நீக்கக் கூடாது எனக் கோரியும், இவர்கள் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். அதன்பின், விடுமுறை தினங்களுக்கு இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளம் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து, இவர்கள் வழக்கு தொடுத்தனர்.
Leave a Reply