வாஷிங்டன்:”பிற நாடுகளின் மீது தனது ராணுவ மேலாண்மையை நிறுவுவதிலோ, ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதையோ சீனா விரும்பவில்லை’ என்று, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருதரப்பிலும் பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இதையடுத்து, நேற்று வாஷிங்டனில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் மத்தியில் அவர் பேசியதாவது:அமைதி வளர்ச்சி என்ற பாதையில் செல்வதையே சீனா விரும்புகிறது. ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதையோ, எந்த ஒரு நாட்டுக்கும் ராணுவ அச்சுறுத்தலாக இருப்பதையோ விரும்பவில்லை. செல்வாக்கு செலுத்துவதையோ அல்லது விரிவாதிக்கத்தைப் பின்பற்றுவதையோ சீனா விரும்பாது.அமெரிக்கா – சீனா இடையேயான உறவு சுமுகமாகவும் நிலையான வளர்ச்சிப் பாதையிலும் சென்று கொண்டிருக்கிறது. இருதரப்பும் பரஸ்பரம் மற்றவரது நலன்களை விரும்புகின்றன. பரஸ்பர மரியாதையின் அடிப்படையில், இருநாடுகளும் ஒருவர் மற்றவரை சமமாக மதிக்க வேண்டும்.
தைவான் மற்றும் திபெத் பிரச்னைகள் சீனாவின் இறையாண்மை மற்றும் எல்லை முழுமை தொடர்பானவை. இந்த விவகாரங்கள், 130 கோடி சீனர்களின் உணர்வுகளோடு நெருங்கியவை. சீன அரசின் கட்டுப்பாட்டில் இன்று வரை திபெத் உள்ளது. 1949ல் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில், சீனாவில் இருந்து பிரிந்து சென்ற தைவானுக்கு சுயாட்சி அளிப்பது குறித்து ஆலோசித்தும் வருகிறது.இவ்வாறு ஹூ தெரிவித்தார்.இதையடுத்து, நேற்று அவர் சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு சிகாகோ நகர மேயர் ரிச்சர்ட் டாலி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களுடன் விருந்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து சிகாகோவில் உள்ள சீன மொழி மற்றும் கலாசார மையத்துக்குச் சென்று பார்வையிட்டார். அதையடுத்து ஹூ, சீனாவுக்குப் புறப்பட்டார்.
சீனாவுக்கு ஒபாமா எச்சரிக்கை:வடகொரியாவின் அணு ஆயுத விவகாரத்தில் சீனா தனது அழுத்தத்தை அதிகரிக்காத பட்சத்தில், அமெரிக்கா தன் படைகளை ஆசியாவில் மேலும் அதிகப்படுத்த வேண்டி வரும் என ஒபாமா, சீன அதிபர் ஹூவை எச்சரித்துள்ளார்.இந்த எச்சரிக்கையை, ஏற்கனவே அவர் தொலைபேசி மூலம் கடந்த மாதம் ஹூவிடம் சொல்லியிருந்தார். கடந்த 18ம் தேதி வெள்ளை மாளிகையில் நடந்த சிறப்பு விருந்தில், அந்த எச்சரிக்கையை மீண்டும் நினைவுபடுத்தினார்.
Leave a Reply