ஆளுநர் உரை: அரசுக்கு ராமதாஸ் பாராட்டு, அதிமுகவுக்கு ‘குட்டு’!

posted in: அரசியல் | 0

சென்னை: சட்டசபையில் ஆளுநரின் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரை என்றும், அதே நேரத்தில் ஆளுநரை உரையாற்றவிடாமல் அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தடுத்திருப்பது ஜனநாயக வரம்பை மீறிய செயல் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவர்னர் உரை வழக்கம்போல் இருந்தாலும் பிரதான எதிர்க்கட்சியும், வேறு சில கட்சிகளும் வழக்கத்திற்கு மாறாக பேரவையில் நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் நடவடிக்கை அளவிற்கு மிஞ்சியது என்பதில் சந்தேகமில்லை.

கவர்னர் உரையாற்ற முற்படும்போது அரசுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. அமைதியாக எழுந்து நின்று எதிர்ப்பு அறிக்கையைப் படித்துவிட்டு வெளிநடப்பு செய்வது என்பதுதான் இதுவரை மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால், நேற்று இந்த மரபு மீறப்பட்டிருக்கிறது. கவர்னரை உரையாற்ற விடாமல் கூச்சல் குழப்பமிட்டு அவையில் தர்ணா போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பது நாடாளுமன்ற ஜனநாயக வரம்பை மீறிய செயலாகும்.

ஆளுநர் உரையில் பெரிய அளவில் பரபரப்பு ஏதும் இல்லை. வழக்கமான அறிவிப்புகள் கொஞ்சம் கூடுதலாக உள்ளன.

குடிசைகளே இல்லாத கிராமங்கள், குடிசைப் பகுதிகளே இல்லாத நகரங்கள் உருவாக்கப்பட்டு அனைவருக்கும் பாதுகாப்பான வீடு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இவை கனவாக முடிந்துவிடாமல் நனவாக வேண்டும்.

ஆனால், மக்களின் சமூக- பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதேப் போன்று வேலைவாய்ப்பை பெருக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கான பெரிய அளவிலான திட்டங்களும் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை.

இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண ஆரம்ப கட்ட முயற்சி கூட இதுவரை மேற்கொள்ளப்படாமல் இருப்பது, முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமையடையாமல் இருப்பது; தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது ஆகியவைப் பற்றி கவர்னர் உரையில் மேலெழுந்த வாரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குறிப்பிட வேண்டுமே என்பதற்காக குறிப்பிடாமல் ஒரு காலக்கெடுவுடன் இவற்றிற்கெல்லாம் தீர்வு காண தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த தவறியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.

தமிழக மீனவர்களை காக்க கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும். இதுதொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடு ரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு ஓங்கி குரல் கொடுத்திருக்க வேண்டும். இது ஒன்றுதான் இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து காக்கவும் ஒரு உந்து சக்தியாக அமையும்.

மொத்தத்தில் இந்தாண்டு கவர்னர் உரை மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சியுரையாகும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

திமுக கூட்டணியில் பாமக இணையலாம் என்று கூறப்படும் நிலையில் ஆளுநர் உரையை 50:50 சதவீதம் ஆதரித்தும், விமர்சித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் அதிமுகவை அவர் கண்டித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *