மெல்போர்ன் : காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை அளிக்கும்படி அந்நாட்டு அரசு, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் வற்புறுத்தியுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் மார்ட்டின் பெர்குசனை சந்தித்து, இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்யும்படி வேண்டினார். “அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய முடியாது’ என, அவர் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதே கருத்தை தான் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கெவின் ருத்தும் நேற்று, கிருஷ்ணாவிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு நிறுவனங்கள் செய்திருந்தன. இந்த பணிக்காக அந்த நிறுவனங்களுக்கு இன்னும் பல லட்ச ரூபாய் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலுவைத் தொகையை விரைந்து அளிக்கும்படி கெவின் ருத், கிருஷ்ணாவிடம் நேற்று வற்புறுத்தினார். இதனால், தர்மசங்கடமான நிலைக்கு ஆளான கிருஷ்ணா, டில்லி திரும்பியதும், விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் இது குறித்து தெரியப்படுத்துவதாக உறுதியளித்தார்.
Leave a Reply