வாஷிங்டன் : கல்வி, தொழில் நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றில் நாம் இந்தியாவை விட பின் தங்கும் அபாயம் எதிர்காலத்தில் இருக்கிறது என, அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.
அமெரிக்க பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஒபாமா, இது குறித்து பேசியதாவது:உலகத்திற்கு சாதகமான அமைதி மற்றும் வளத்துக்காக, தெற்காசிய நாடுகளுடன் புது உறவை மேற்கொண்டுள்ளோம். வேலை வாய்ப்பை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியாவும் சீனாவும் வளர்ந்துள்ளன. கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றில் நாம் இந்த நாடுகளை விட பின் தங்கும் அபாயம் உருவாகி வருகிறது. காலச்சூழலுக்கு ஏற்ப கல்வியில் புதுமையை புகுத்துவதால், அவர்கள் உலக போட்டிகளை சமாளிக்கும் திறன் பெற்றுள்ளனர். இளம் வயதிலேயே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவியல், கணிதங்களை கற்பிக்கின்றனர். கல்வித் துறையில் அதிக முதலீடுகளை செய்கின்றனர். இதனால், அவர்கள் வேகமாக முன்னேறுகின்றனர்.
இந்தியா மற்றும் சீனாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவில் இரண்டரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. சீனா, இந்தியா போன்ற நாடுகள் கல்வியில் நமக்கு போட்டியாக இருப்பதால் கல்வியில் புதுமையும், சீர்திருத்தமும் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அவற்றை ஈடு கட்டி சமாளிப்பதில் அரசு அக்கறை காட்டி வருகிறது. பத்து ஆண்டுகளுக்குள் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் ஆகிய துறைகளில் ஒரு லட்சம் ஆசிரியர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
அல் – குவைதா பயங்கரவாதிகள் தொடர்ந்து அமெரிக்காவை தாக்க திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க புலனாய்வுத் துறையினர், பயங்கரவாதிகளின் திட்டத்தை புரிந்து கொண்டு அதை முறியடித்து வருகின்றனர். அமெரிக்க குடும்பத்தில் முஸ்லிம்களும் ஒரு அங்கம். பாகிஸ்தானில் பதுங்கியுள்ள அல் – குவைதாவினர், அந்நாட்டு அரசினால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், பாகிஸ்தானில் அல் – குவைதாவினரின் செல்வாக்கு குறைந்து விட்டது. ஆப்கன் மற்றும் அரபு நாடுகள் எங்கிருந்தாலும் பயங்கரவாதிகளை முறியடிப்போம்.
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் பனிப்போர் காணப்பட்ட காலத்தில் சோவியத் யூனியன் ஸ்புட்னிக் விண்கலத்தை நிலவுக்கு செலுத்தி சாதனை படைத்தது. அன்று “நாசா’என்ற அமைப்பு இல்லை. ஆனால், கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் அதிக முதலீடு செய்து பலனைக் கண்டோம். விளைவு, சந்திரனுக்கு பயணம் உட்பட சாதனைகள். இன்று, நாம் புதிதாக ஸ்புட்னிக் யுகத்தைக் காண வேண்டும்.இவ்வாறு ஒபாமா பேசினார்.
Leave a Reply