இந்திய மாணவர்களை கண்காணிக்கும் கருவி : அமெரிக்காவின் அவமானச் செயல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக் கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில், “எலக்ட்ரானிக் டேக்’ எனப்படும் கருவியைக் கட்டி, அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருகிறது.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக புதிய, “இ-மெயில்’ முகவரி ஒன்றையும் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிகப் பெரிய நகரமான சான்பிரான்சிஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது டிரி வேலி பல்கலைக் கழகம். அமெரிக்க சட்டப்படி, இப்பல்கலை, ஆண்டுக்கு 144 விசாக்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்க முடியும். ஆனால், இந்தாண்டு சட்ட விரோதமாக மாணவர்களிடம் அதிகளவில் பணத்தைக் கறந்து, போலி விசாக்கள் மூலம் மாணவர் சேர்க்கையை பல்கலை நடத்தியுள்ளது.

இப்பிரச்னையில் மாட்டியுள்ள 1,555 இந்திய மாணவர்களில், 750 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர், வேறு வழியில்லாமல் தங்கள் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அங்கேயே தங்கி, வேறு கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடர்வதற்காக முயன்று வருகின்றனர். அமெரிக்க குடியேற்றத் துறை இவர்கள் அனைவரிடமும் விசாரித்து வருகிறது.

இதற்காக இவர்களது காலில், “எலக்ட்ரானிக் டேக்’ எனப்படும் மின்னணு கண்காணிப்புக் கருவியை அத்துறை கட்டி விட்டுள்ளது. பாதத்திற்கு மேல் வளையம் போன்ற எலக்ட்ரானிக் தகவல் தரும் கருவி மாட்டப்படுகிறது. மாணவர்கள் எங்குள்ளனர் என்பதை இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள முடியும். இதற்கு, இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி இது பற்றி கூறியிருப்பதாவது: அமெரிக்க கொள்கைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இந்த விவகாரத்தில் மோசடி செய்தது பல்கலைக் கழகம் தான். மாணவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகள். அதனால், அவர்கள் மீது இரக்கம் கொண்டு இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கைவிட வேண்டும். நேர்மையான மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் இந்திய அரசின் கவலை. அதற்காக அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்விவகாரத்திற்கு காரணம் போலி ஏஜன்டுகள் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வயலார் ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷன் தலைவர் கோமதி ஜெயராம் கூறுகையில், “இந்தப் பிரச்னையில் அரசியல் ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த மாணவர்களை இங்குள்ள வேறு பல்கலைக் கழகங்களுக்கு மாற்றுவது அல்லது இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது ஆகிய நடவடிக்கைகளை எடுக்கும்படியும் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்றார்.

இ-மெயில் முகவரி : டிரி வேலி பல்கலைக் கழகத்திற்கு படிக்கச் சென்றுள்ள மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர் இப்பிரச்னையில் இந்தியத் தூதரக உதவிகளைப் பெறுவதற்காக www.indianembassy.org என்ற இ-மெயில் முகவரியை, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து, minca@indiagov.org மற்றும் edu@indiacgny.org என்ற முகவரிகளுக்குக் கடிதம் எழுதி, இந்திய அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *