சென்னை : “”மாணவியர் நாளை ஒரு இந்திராவாக, மார்க்ரெட்டாக, ஜெயலலிதாவாக வர வேண்டும்,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று மாலை வந்தார். கட்சி நிர்வாகிகள் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், ஜெயகுமார், ஆதிராஜாராம் உட்பட பலர் வரவேற்றனர்.சென்னை, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 72 கல்லூரிகளில் படிக்கும் 4,000 மாணவ, மாணவியர் அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தனர். தமிழக அமைப்பு சாரா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த மொத்த உறுப்பினர்களான இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 900 பேர் அ.தி.மு.க.,வில் இணைய விருப்பம் தெரிவித்து, இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் இளஞ்சூரியன் தலைமையில் 175 பேரும், தமிழ் மாநில மக்கள் கட்டடத் தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரவை நிர்வாகிகள் உட்பட 4,325 பேர் அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தனர்.
இந்த இணைப்பு விழாவில் ஜெயலலிதா பேசியதாவது:அ.தி.மு.க.,வில் இரண்டு லட்சம் தொழிலாளர்கள், பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவியர் அ.தி.மு.க.,வில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.மாணவ செல்வங்கள் தான் நாளை இந்த நாட்டை ஆளப்போகும் தலைவர்கள், தலைவிகள். நாளை உங்களில் சிலர் ஒரு இந்திராவாக, ஒரு மார்க்ரெட்டாக, ஒரு ஜெயலலிதாவாக வர வேண்டும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து இருக்கிறீர்கள். எத்தகைய நம்பிக்கையுடன் கட்சியில் இணைய வந்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கை வீண் போகாது. உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
Leave a Reply