ஜகார்தா:இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 11 பேர் பலியாயினர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தோனேசியா ஜாவா தீவிலுள்ள மேராக் துறைமுகத்தில் இருந்து, பயணிகள் கப்பல் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றது. கப்பலில், நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கப்பலின் ஒரு பகுதி தீப்பிடித்து எரியத் துவங்கியது.
அச்சமடைந்த பயணிகளில் சிலர், உயிர் தப்ப கடலில் குதித்தனர். எனினும், இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.தகவல் அறிந்து ஐந்து மீட்புக் கப்பல்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன. உயிரிழந்த 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கப்பலில் ஏற்பட்ட தீயால், அந்தப் பகுதியில், 3 கி.மீ., தூரம் வரை கரும்புகை சூழ்ந்திருந்தது. தீ விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இருந்தாலும், கப்பல் பயணி ஒருவர் சிகரெட் பிடித்து விட்டு, அதை அணைக்காமல் வீசியதால் விபத்து ஏற்பட்டதாக சிலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்தில் ஐவர் பலி: இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருந்து 270 கி.மீ., தொலைவில் உள்ள பஞ்சார் பகுதியில், ஒரு கிராமம் அருகே இரு ரயில்கள் நேற்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ரயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
Leave a Reply