மதுரை : முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகும்
ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை பறிக்க கலெக்டருக்கு உரிமையுண்டு என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குமரகிரி ஊராட்சி தலைவர் சுகந்தி தாக்கல் செய்த ரிட் அப்பீல் மனு:ஊராட்சி தலைவராக 2006ல் தேர்வு செய்யப்பட்டேன். கையாடல் செய்ததாக கலெக்டர் 2010 மே 31ல் நோட்டீஸ் அனுப்பினார். பின், செக்கில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஒ.,விடம் ஒப்படைத்து கலெக்டர் உத்தரவிட்டார். என் அதிகாரத்தை பறிக்க கலெக்டருக்கு உரிமையில்லை. கலெக்டர் உத்தரவை ரத்து செய்ய கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தேன். மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
.
ரிட் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், ஆர்.சுப்பையா பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் அதிகாரத்தை ரத்து செய்யும் முன், கலெக்டர் நோட்டீஸ் கொடுத்தாரா என பார்க்க வேண்டும். கலெக்டர் அனுப்பிய நோட்டீசுக்கு மனுதாரர் அளித்த பதில் திருப்தியளிக்கவில்லை. மேலும் மனுதாரர் பல முறைகேடு செய்ததாக பதில் மனுவில் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார். முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்க கலெக்டருக்கு உரிமையுண்டு. மனுதாரர் அளித்த பதில் திருப்தியில்லாமல் கலெக்டர் உத்தரவிட்டது சரி, என குறிப்பிட்டது.
Leave a Reply