சென்னை: கனிமொழிக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கனிமொழியை வெகுவாகப் பாராட்டிப் பேசி, அழகிரிக்கு மறைமுகமாகப் பதிலளித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுகவில் பூகம்பம் வெடித்துள்ளது. ராசா, கனிமொழி ஆகியோருக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி. மேலும் தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் முதல்வரிடம் கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் அழகிரிக்கு நேற்று மறைமுகமாக ஒரு பதிலைத் தந்துள்ளார் முதல்வர். அது, கனிமொழியைப் பாராட்டி அவர் பேசியது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பயிற்சி அளித்து வேலை அளிக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி கடந்த சுதந்திரதின உரையின்போது அறிவித்தார். அத்திட்டத்தின் கீழ் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்ட 5000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் நேற்று நடந்தது.
ஆணைகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
கடந்த சுதந்திர தினத்தன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து நான் உரைநிகழ்த்தியபோது ஒன்றை குறிப்பிட்டேன். ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டை உலக இளைஞர்கள் ஆண்டு என்று அறிவித்திருப்பதையொட்டி வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏற்ப பயிற்சிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் புதிய திட்டம் ஒன்று இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்த இளைஞர்கள், என்ஜினீயரிங், இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றுள்ளவர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புக்கான திறன்வளர்ப்பு பயிற்சி இந்த திட்டத்தின்கீழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற்ற இளைஞர்கள் பல்வேறு தொழில்நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்புகளைப் பெற இந்த திட்டம் வழிவகுக்கும். நடப்பு ஆண்டு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவிருக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை இந்த நன்னாளில் வெளியிடப்படுகிறது என்று கொடியேற்றிய இடத்திலே இருந்து கூறினேன்.
அப்படி அறிவிக்கப்பட்ட அந்த செய்தி, அதைத்தொடர்ந்து, சி.ஐ.ஐ. நிறுவனம் அதிலே ஆலோசகராக நியமிக்கப்பட்டது. அரசின் 15 துறைகள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு துறைக்கும் செயலாளர் தலைமையில் ஒரு துறைசார் பணிக்குழு அமைக்கப்பட்டு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டது.
அந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும், தேவைப்படும் கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்காகவும் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை துணைத்தலைவராகவும் துறையின் செயலாளர் மற்றும் சில முக்கியதுறைகளின் செயலாளர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு மாநில அளவிலான திறன் மேம்பாட்டுக்கழு கடந்த 25.9.2010 அன்று அமைக்கப்பட்டது.
இந்த திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்துவதற்காக, “தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கச் சங்கம்” என்னும் அமைப்பு 22.12.2010 அன்று தமிழக அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் தேர்வு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 21-ந் தேதி நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்துகொண்ட 13 ஆயிரத்து 441 இளைஞர்களை 83 தனியார் தொழில் நிறுவனங்கள் அழைத்து, நேர்முகத் தேர்வு நடத்தி, அவர்களில், 5 ஆயிரத்து 216 பேர்களை தேர்வு செய்தன.
நெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 335 பேர்களும், திருவாரூர், நாகை ஆகிய 4 ஆயிரத்து 703 பேர்களையும், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 5 ஆயிரத்து 346 பேர்களையும் தேர்வு செய்தன. இவர்கள் அனைவருக்கும் பயிற்சியும், பணி நியமனமும் பெறுவதற்கான ஆணைகளும் இன்று வழங்கப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதும் நாம் இந்த வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக இந்த அரசின் சார்பில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்ற பெரு முயற்சியாகும்.
“கடந்த 4 ஆண்டு காலமாக பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வயது உச்ச வரம்பைத் தளர்த்துவோம்” என்றும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட “பணி நியமனத் தடையாணை” விளைவாக காலியாக உள்ள சுமார் 3 லட்சம் பணி இடங்களையும் நிரப்புவோம் என்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே வாக்குறுதிகள் வழங்கினோம். அந்த வேலையைத் தான் அந்தத் தேர்தல் அறிக்கையினுடைய உறுதி மொழியைத் தான் இந்த அரசு நிறைவேற்றி வருகின்றது. என்றைக்கு ஒரு இளைஞன் கூட பாக்கியில்லாமல், தமிழகத்திலே வேலைவாய்ப்பினை அனைவரும் பெறுகிறார்களோ அந்த நாள்தான் நான் முழு மகிழ்ச்சி அடையக் கூடிய நாளாக இருக்க முடியும்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 27 ஆயிரத்து 347 பேர்களும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 26 ஆயிரத்து 354 பேர்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 11 பேர்களும், காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொகுப்பூதியப் பணியாளர்கள் 2 லட்சத்து 93 ஆயிரத்து 606 பேர்களும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டோர் 14 ஆயிரத்து 996 பேர்களும் – என மொத்தம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 314 பேர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளிலும் நிரந்தர வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
படித்து வேலைவாய்ப்பற்ற நிலையிலே உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150 வீதமும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200 வீதமும்; பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 வீதமும் நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம் 11.11.2006 அன்று திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டு; தொடர்ந்து வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இதுவரை 4 லட்சத்து ஆயிரத்து 704 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இதுவரையில் ரூ.284 கோடி அரசு உதவித் தொகை வழங்கியுள்ளது என்பதை நான் பெருமகிழ்ச்சியோடும், பெருமூச்சோடும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பெருமூச்சு ஏனென்றால், இவ்வளவு பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்களே என்பதற்காக பெருமூச்சு.
அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடிகிறதே ரூ.284 கோடி ரூபாய் அளவிற்கு உதவி செய்ய முடிந்ததே என்பதால் பெரு மகிழ்ச்சி. பெருமூச்சு நிற்க வேண்டும், பெருமகிழ்ச்சி பெருக வேண்டும். அந்த நிலைமையிலே இத்திட்டம் வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய அவா.
கவிஞர் கனிமொழி அரசாங்கத்தின் இந்தத் திட்டங்களை மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட கலெக்டர்களோடும் தொழில் நிறுவனங்களோடும் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாம்களை பல மாவட்டங்களிலே நடத்தி வருகிறார்.
அந்த முகாம்களில், இதுவரையிலே மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டனர் என்றும், அவர்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன என்றும் அறிந்து நான் மிக மிக மகிழ்ச்சியடைகிறேன். இந்த முயற்சியும் ஒரு வகையில் இன்னொரு புறத்திலே தொடர வேண்டுமென்று விரும்புகிறேன். வாழ்த்துகின்றேன்.
நான் இந்த அரசின் தொழிற்துறையையும் நிர்வகித்தவன் என்ற முறையில் ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தத்திலே கையெழுத்து போடும்போது அந்தத் தொழில் அதிபர்களிடத்தில் அவர்கள் ஜப்பானிலிருந்து வந்தாலும், கொரியாவிலிருந்து வந்தாலும், வேறு எந்த நாட்டி லிருந்து வந்தாலும் கையெழுத்து போடுகின்ற நேரத்திலே அவர்களிடத்தில் நான் பெறுகின்ற உறுதிமொழி நீங்கள் வேலை வாய்ப்பு உத்தரவாதம் செய்ய வேண்டும்.
அது மாத்திரமல்ல உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் குறிப்பாக அந்தந்த வட்டாரத்திலே உள்ளவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூரிலே தொழிற்சாலை தொடங்கப்படுகிறது என்றால் ஸ்ரீபெரும்புதூருக்கு சுற்றுச்சூழலிலே இருக்கின்ற மக்களுக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உறுதிமொழியைப் பெற்றுத் தான் கையெழுத்திடுவேன்.
என்னுடைய தொழில் துறை பொறுப்பை தற்போது ஏற்று நடத்துகின்ற துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதே உறுதிமொழியைப் பெற்றுத்தான் புதிய தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தம் போடுகின்ற நேரத்திலே கையெழுத்திடுகிறார். நிறைய தொழிற்சாலைகள், வளங்கள், வசதிகள், வாய்ப்புகள் இவை எல்லாம் பெருகியிருந்தால்தான் அது முழுமையான நாடாக முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் பல பகுதிகள் நாம் முன்னேறியிருந்தாலும் கூட இன்னும் முன்னேற்ற வேண்டிய பகுதிகள் நிரம்ப இருக்கின்றன.
அந்த நிலையையும் நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு நான் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். இளைஞர்களைத்தான் நம்பியிருக்கிறேன். இளைஞர்களால்தான் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். இளைஞர்களால்தான் உருவான ஒரு நல்ல நிலையை கட்டிக் காக்கவும் முடியும். கட்டிக் காக்கவும், தட்டியெழுப்பவும் நிரம்பிய திறன் படைத்த இளைஞர்களாகிய நீங்கள் இன்று காட்டுகின்ற இதே ஆர்வத்தைத் தொடர்ந்து காட்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.
Leave a Reply