சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மணி விழா முதல்வர் கருணாநிதியின் வீட்டில் எளிமையாக நடந்தது. இதில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு ஜனவரி 30ம் தேதி பிறந்த நாளாகும். ஆனால் அந்த சமயத்தில் முதல்வர் கருணாநிதி டெல்லி செல்லவுள்ளதால் மணி விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நட்சத்திரப் பிறந்த நாளான நேற்றே மணி விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் மணி விழாவைக் கொண்டாடினார் அழகிரி. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, மனைவி தயாளு அம்மாள், சகோதர, சகோதரிகள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
முதல்வர் கருணாநிதியிடம் மு.க.அழகிரி தனது மனைவி காந்தி சகிதம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
வழக்கமாக அழகிரி பிறந்த நாளன்று மதுரை தடபுடலாக காணப்படும். அழகிரியை வாழ்த்தி விதம் விதமான பேனர்கள், சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகள் என அழகிரியின் பக்தர்கள் அமர்க்களப்படுத்துவார்கள். ஆனால் இந்த முறை தான் வெளியூர் போகப் போவதால் யாரும் தன்னை வாழ்த்த வர வேண்டாம் என்று அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர். இருப்பினும் பிறந்த நாளான 30ம் தேதி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தடபுடலாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Leave a Reply