வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியின் மகளான நிக்கி ஹாலே, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். தற்போது கிறிஸ்துவராக மாறிவிட்ட 38 வயதான நிக்கி ஹாலேவுக்கு கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தெற்கு கரோலினா மாகாண கவர்னர் தேர்தலுக்கு உரிய வேட்பாளராக இவர் தேர்வாக மிகவும் சிரமப்பட்டார். இவர் மீது, பல்வேறு செக்ஸ் புகார்கள் கூறப்பட்டன. இருப்பினும், வேட்பாளர் தேர்வில் அதிக ஓட்டுகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
நேற்று முன்தினம் அவர், தெற்கு கரோலினாவின் 86வது கவர்னராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்கும் போது, கடும் பனிப் புயல் வீசிக் கொண்டிருந்தது. இதனால், இந்த மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால், லூசியானா மாகாண கவர்னராக உள்ளார். நிக்கி பதவி ஏற்பு விழாவில் இவரும் கலந்து கொண்டார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் உட்பட ஏராளமான இந்திய பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
தெற்கு கரோலினா மாகாண சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜீன் டோயல், நிக்கி ஹாலேவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கணவர் மைக்கேல், குழந்தைகள் ரீனா, நளின் ஆகியோர், நிக்கி பதவி ஏற்கும் போது உடன் இருந்தனர். நிக்கிக்கு முன்னதாக தெற்கு கரோலினா கவர்னராக மார்க் ஸ்டேன்போர்டு, எட்டாண்டு காலம் பணி புரிந்தார். 38 வயதான நிக்கி, அமெரிக்க வாழ் முதல் இந்தியப் பெண் கவர்னர் என்ற பெருமையை பெறுகிறார். இதன் மூலம் அமெரிக்காவில் யூதர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் செல்வாக்கு பெற்றவர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழாவில் நிக்கி பேசுகையில், “நம்மிடம் இல்லாததைத் தேடி அலைவதை விட, நம்மிடம் உள்ளதை வைத்து மகிழ்ச்சியடையும் உபாயத்தை வளர்த்துக் கொண்டேன். கடின முயற்சியின் மூலம் இந்த பதவியை அடைந்துள்ளேன். என் தாய்க்கு இந்த மாகாணத்தில் நீதிபதி பதவி கிடைத்தது. ஆனால், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற எதிர்ப்பு எழுந்ததால், அவரால் அந்த பதவியில் தொடர முடியவில்லை.
தற்போது இந்த விழாவில் என் தாய் கலந்து கொண்டு, நான் கவர்னரானதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் ஆண், பெண் மற்றும் இன பேதமின்றி தொண்டாற்றுவேன். இந்த மாகாண மக்களுக்கு வாய்ப்பும், மகிழ்ச்சியும் காத்திருக்கிறது’ என்றார்.
Leave a Reply