சென்னை : புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களை, இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் கொண்டு வந்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
கல்வி நிறுவனங்களில் 20 அல்லது அதற்கு மேல் பணியாற்றுபவர்கள் இருந்தால் அந்த கல்வி நிறுவனங்களை இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான உத்தரவை, புதுச்சேரி கவர்னர் பிறப்பித்தார்.
தனியார், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு, தொழிலாளர் காப்பீடு சட்ட அம்சங்கள் பொருந்தும் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 2005 ஜூனில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து, புதுச்சேரியில் உள்ள முத்துரத்தினா அரங்கம் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகள், ஐகோர்ட்டில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தன.
இத்தகைய உத்தரவை பிறப்பிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை என்றும், கல்வி நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ., சட்டம் பொருந்தாது என்றும் மனுக்களில் கூறப்பட்டது. மனுக்களை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:
அரசியலமைப்புச் சட்டப்படி, ஜனாதிபதி சார்பில் கவர்னர் செயல்பட்டு, அறிவிப்பாணையை பிறப்பித்துள்ளார். இதில் குற்றம் காண முடியாது. நிறுவனம் என்றால் ஒவ்வொரு நிறுவனத்தையும் குறிக்கும். அந்த நிறுவனங்கள் எல்லாம் தொழில், வர்த்தகம், விவசாயம் ஆகிய குணநலன்களை கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள் இதை தெளிவுபடுத்தியுள்ளன.
எனவே, எந்த நிறுவனமாக இருந்தாலும் அதை இ.எஸ்.ஐ., சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான உத்தரவை அரசு பிறப்பிக்கலாம். இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply