கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: சட்டசபைத் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக முதல்வர் கருணாநிதி வருகிற 30ம் தேதி டெல்லி செல்கிறார்.

அப்போது சோனியா காந்தியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமரையும் அவர் சந்திப்பார்.

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. கடந்த தேர்தலைப் போலவே இந்த சட்டசபைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அது அறிவித்துள்ளது.

அதேசமயம், ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்ற சிலர் தொடர்ந்து கூட்டணி குறித்தும், தொகுதி ஒதுக்கீடு குறித்தும், ஆட்சியில் பங்கு குறித்தும் பேசி வந்த பேச்சுக்கள், செய்து வந்த பிரசாரம் காரணமாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் மனதில் ஆட்சியில் பங்கு தேவை என்ற கருத்து பரவி விட்டது. மேலும் கடந்த முறையை விட இந்த முறை மிகவும் கூடுதலான தொகுதியையும் காங்கிரஸார் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நேரடியாகப் பேச முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் வருகிற 30ம் தேதி டெல்லி செல்கிறார்.

இந்த சந்திப்பின்போது திமுக தனது நிலையை தெளிவாக தெரிவிக்கவுள்ளது. மேலும் எத்தனை தொகுதிகள் காங்கிரஸுக்கு என்பதையும் சோனியாவிடமே முதல்வர் கருணாநிதி நேரடியாக பேசி முடிவு செய்யவுள்ளார். இதன் மூலம் தமிழக காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து வரும் சவால்களை முறியடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்கையும் கருணாநிதி சந்திப்பார் என்று தெரிகிறது.

தனக்கும், தனது கட்சிக்கும் தேவை என்றால் மட்டுமே முதல்வர் டெல்லி செல்வதாக தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. எனவே இந்த பயணத்தின்போது இலங்கைக் கடற்படையினரால் தமிழகமீனவர்கள் தொடர்நது தாக்குதலுக்குள்ளாகி வருவது குறித்து பிரதமருடன் முதல்வர் விரிவாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 1ம் தேதி டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டிலும் கருணாநிதி கலந்து கொள்கிறார்.அதை முடித்துக் கொண்டு அவர் சென்னை திரும்புகிறார். 3ம் தேதி திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் காங்கிரஸ் கட்சியுடன் நடந்த பேச்சுக்கள் குறித்த விவரத்தைத் தெரிவித்து கட்சியின் ஒப்புதலைப் பெறுகிறார். அதன் பின்னர் கூட்டணி தொடர்பான விரிவான தகவல்களை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *