வாஷிங்டன் : அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, பல்கலைக் கழகம் ஒன்று, சட்ட விரோத குடியேற்றம் மற்றும் பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கி இழுத்து மூடப்பட்டதால், அதில் படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த குறிப்பாக, ஆந்திர மாணவர்கள் பலர் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின், சான்பிரான்சிஸ்கோ நகரின் புறநகர்ப் பகுதியான பிளசன்டன் என்ற இடத்தில் “டிரி வேலி’ பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. உலகளாவிய பார்வையிலும், கிறிஸ்தவ நம்பிக்கை சார்ந்த சூழலிலும் உயர் கல்விகளைத் தருவதாக இப்பல்கலையின் இணையதளம் கூறுகிறது.
இதில் தற்போது ஆயிரத்து 555 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 95 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களிலும் அதிகமான பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இம்மாதம் 10ம் தேதி பல்கலையில் வகுப்புகள் துவங்க திட்டமிடப்பட்டிருந்ததால், இந்திய மாணவர்கள் பலர் அங்கு வந்துள்ளனர்.
வெளிநாட்டவர் பலருக்கு மாணவர்கள் என்ற பெயரில் விசா வழங்கி மோசடி செய்ததாகவும், சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க வரி அமலாக்கத் துறை (ஐ.சி.இ.,) குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஐ.சி.இ., திடீர் சோதனை நடத்தியது. இதையடுத்து பல்கலைக் கழகம் இழுத்து மூடப்பட்டுவிட்டது.
தொடர்ந்து ஐ.சி.இ., நடத்திய ஆய்வில், பல வெளிநாட்டு மாணவர்கள் பல்கலையின் பல்துறைப் படிப்புகளைப் படிப்பதாகவும் அவர்கள் கலிபோர்னியாவில் தங்கியிருப்பதாகவும் காட்டப்பட்டிருந்ததும், ஆனால் உண்மையில், பல வெளிநாட்டவர்கள், பல்கலை மாணவர்கள் என்ற பெயரில், சட்ட விரோதமாகக் குடியேறி மேரிலேண்ட், விர்ஜினியா, பென்சில்வேனியா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. “இந்தப் பல்கலை ஒரு மோசடி நிறுவனம்’ என்று ஐ.சி.இ., வெளிப்படையாக விமர்சித்துள்ளது.
இந்நிலையில் பல்கலையின் பெயரில் மாணவர் விசா மற்றும் மாணவர் வேலைத் திட்ட விசா பெற்றவர்களை ஐ.சி.இ., விசாரித்து வருகிறது. இதற்கிடையில் ஐ.சி.இ.,யின் விசாரணை இந்திய மாணவர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதால், பலர் அங்கிருந்து வெளியேற முயன்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலை நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டால், மாணவர் விசாவான எப்-1 விசாவில் வந்த மாணவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் குடியேற்ற அந்தஸ்தை இழந்து விடுவர். இதனால் அச்சம் அடைந்துள்ள பலர், அமெரிக்க இந்திய குடியேற்ற விவகாரத்தைக் கவனித்து வரும், சட்ட நிபுணர்களுக்கு இவ்விவகாரம் குறித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும், பிரபல இந்திய சட்ட நிறுவனமான “மூர்த்தி சட்ட நிறுவனம்’, “சில மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதை ஐ.சி.இ., தடுத்து நிறுத்தியிருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளன’ என்று தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
Leave a Reply