பீஜிங் : இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை வரவேற்கிறோம் என, சீனா தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா தலைவர்கள் நிதின் கட்காரி, விஜய் கோயல், ஆர்த்தி மெஹ்ரா, லட்சுமண் கோவா, சவுதான் சிங், வினய் சகஸ்ரபுத்தி ஆகியோர் ஐந்து நாள் சீன பயணம் மேற்கொண்டுள்ளனர். சீன கம்யூ., கட்சியின் நிலைகுழு உறுப்பினர் டிங் சியுசியாங், பா.ஜ., தலைவர்களை பீஜிங் நகரில் வரவேற்று விருந்தளித்தார்.
அப்போது டிங் குறிப்பிடுகையில், “சீனாவின் வர்த்தக நகரமாக ஷாங்காய் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவை சேர்ந்த பலர் இந்த நகரில் பணியாற்றுகின்றனர். ஷாங்காய் வளர்ச்சிக்கு இவர்களது பங்களிப்பும் ஒரு காரணம். இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் சிறந்தவர்கள் என்பதால் அவர்களை சீனா வரவேற்கிறது’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் நிதின் கட்காரி குறிப்பிடுகையில், “ஷாங்காய் வளர்ச்சிக்கு காரணமான மாதிரியை பின்பற்றும்படி பா.ஜ., கட்சியை சேர்ந்த முதல்வர்களை வற்புறுத்துவேன். வெளிநாடுகளில் சிறப்பாக பணியாற்றும் இந்தியர்கள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. அதே நேரத்தில் தாய் நாட்டுடன் இருக்கும் தொடர்பை நீங்கள் பேணி காக்க வேண்டும். தாய் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும்,’ என்றார்.
Leave a Reply