கடலூர் : சீர்காழியில் அமைய உள்ள அனல் மின் நிலையத்திலிருந்து, கர்நாடக மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெங்களூரில் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் கையெழுத்தானது.
என்.எல்.சி., நிறுவனம் நாடு முழுவதும் வர்த்தகத்தை விரிவுப்படுத்த மணிக்கு ஒரு கோடி யூனிட் தயாரிக்க பல புதிய மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே, மணிக்கு 19 லட்சத்து 80 ஆயிரம் யூனிட் மின் சக்தி தயாரிக்கும் (1,980 மெகா வாட் ) திறன் கொண்ட மின் நிலையத்தையும், உத்தரபிரதேச மாநிலம் காதாம்பூர் பகுதியில், மணிக்கு 20 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையத்தையும் அமைக்க என்.எல்.சி., திட்டமிட்டுள்ளது. இந்த மின் திட்டத்திலிருந்து பெறப்படும் மின்சாரம், மத்திய மின் சக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி பல மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளது. சீர்காழி அருகே, 10 ஆயிரத்து 395 கோடி ரூபாயில் அமைய உள்ள மின் நிலையத்திலிருந்து பெறப்படும் மின்சாரம், தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரபிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி கர்நாடகத்திற்கு 400 மெகாவாட் (மணிக்கு நான்கு லட்சம் யூனிட்) வழங்கப்பட வேண்டும்.
இந்த மின் நிலையம் அமைத்த பின், அங்கு உற்பத்தியாகும் மின்சாரம் பெறுவது தொடர்பாக நேற்று முன்தினம் பெங்களூரில் ஒப்பந்தம் கையெழுத்தானது. என்.எல்.சி., இரண்டாம் அனல் மின் நிலைய விரிவாக்க தலைமை பொது மேலாளர் பால்பாண்டி மற்றும் கர்நாடக மின் கழக பொறுப்பு அமைப்புகளான பெங்களூர், மங்களூர், குல்பர்கா, ஹூப்ளி, சாமுண்டீஸ்வரி ஆகிய மின் நிறுவனங்கள் அடங்கிய “எஸ்காம்ஸ்’ அமைப்பின் பிரதிநிதிகள், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கர்நாடக முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் பெங்களூரில் நடந்த இந்நிகழ்ச்சியில், கர்நாடக மின் துறை அமைச்சர் குமாரி ÷ஷாபா கரண்டால்ஜி, தலைமைச் செயலர் ரங்கநாத், மின்துறை முதன்மைச் செயலர் ஷமீம் பானு, என்.எல்.சி., நிர்வாகத் துறை இயக்குனர் ஆச்சார்யா, மின் துறை முதன்மைச் செயலர் நாகராஜன் பங்கேற்றனர்.
Leave a Reply