சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : “விக்கிலீக்ஸ்’ வெளியிடும்?

posted in: உலகம் | 0

லண்டன் : சுவிட்சர்லாந்து வங்கி ஒன்றின் முன்னாள் பணியாளர் ஒருவர், சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் ஆசியா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் யார் யார் எல்லாம் சட்ட விரோதமாக பணம் சேர்த்து வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை “விக்கிலீக்ஸ்’ நிறுவனத்திடம் அளித்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இயங்கி வரும் ஜூலியஸ் பார் என்ற வங்கியில் பணியாற்றியவர் ருடால்ப் எல்மர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், சுவிஸ் வங்கிகள் பற்றிய பல்வேறு ரகசிய ஆவணங்களை “விக்கிலீக்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக கூறியிருந்தார். அதன்படி, நேற்று லண்டனில் “பிரன்ட் லைன்’ கிளப்பில், அதன் உரிமையாளரும், “விக்கிலீக்ஸ்’ பிரதிநிதியும், ஜூலியன் அசாஞ்சின் நண்பருமான வாகன் ஸ்மித் முன்னிலையில், அந்த ரகசிய ஆவணங்களை ஒப்படைத்தார்.

அந்த ஆவணங்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் “விக்கிலீக்ஸ்’ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை சேர்ந்த கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகிய 40 பேர் சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் வரி ஏய்ப்பு செய்வதற்காக 2,000 கணக்குகளில் போட்டு வைத்துள்ள பணம் பற்றிய ஆவணங்களை “விக்கிலீக்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக எல்மர் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வங்கி விதிகளை மீறியதற்காக எல்மர், நாளை, சுவிட்சர்லாந்தில் வழக்கில் ஆஜராக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *